தமிழ் சினிமாவில் ஹீரோக்களை வசூல் மன்னன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். அந்த வகையில் கருப்பு வெள்ளை படங்கள் வந்த காலகட்டத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் வசூல் மன்னர்களாக இருந்தனர். அதன்பிறகு ரஜினிகாந்த் கமல்ஹாசன் படங்கள் கோடிக்கணக்கில் வசூலித்தன. இப்போது அந்த வரிசையில் விஜய் அஜீத்குமாரும் இணைந்திருக்கின்றனர்.
ஆனால் தமிழ் சினிமாவில் உருவான எந்த ஒரு படமும் இதுவரை உலகளவில் 1000 கோடி ரூபாய் என்ற வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தி தெலுங்கு கன்னடம் மொழிகளில் வெளியான சில படங்கள் 1000 கோடி ரூபாய்க்கு வசூலை அள்ளியிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான புஷ்பா 2 படத்தின் மொத்த வசூல் 1800 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல் இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான் படமும் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை இயக்கியது தமிழில் தெறி பிகில் மெர்சல் போன்ற மாஸ் ஹிட் படங்களை இயக்கிய அட்லி என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இந்தி தெலுங்கு கன்னட மொழிகளில் வெளியாகும் படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை வெகு எளிதாக அள்ளி விடுகின்றன.
ஆனால் தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை தொடும் படங்களின் எண்ணிக்கையே கடந்த 2024ம் ஆண்டில் 241 படங்களில் வெறும் 8 ஆக தான் இருந்தது. எப்படியும் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஏனெனில் படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 440 கோடி ரூபாய் மட்டுமே கூலி தியேட்டர்களில் வசூலித்திருக்கிறது.
ஆனால் கூலி படத்தின் வசூல் 1000 கோடி ரூபாய் என்ற சாதனையை செய்துவிடும். தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் கூலி தான் என்று சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். ஆனால் அப்படி சொல்பவர்கள் இப்படி போலி கணக்கு காட்டி தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்று சினிமா விமர்சகர் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு எச்சரித்திருக்கிறார்.
இதுகுறித்து ப்ளு சட்டை மாறன் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, பாகுபலி புஷ்பா கேஜிஎப் ஆர்ஆர்ஆர் ஜவான் உள்ளிட்ட படங்களின் ரூ. 1000 கோடி வசூல் என்பது தியேட்டர்கள் மூலமாக மட்டுமே வந்தவை. கூலிக்கு ரூ. 1000 கோடி தியேட்டர் வசூல் என்பது சாத்தியமில்லை என்பதால் ஓடிடி சேட்டிலைட் ஆடியோ வியாபாரத்தையும் சேர்த்துதான் ரூ. 1000 கோடி என்று கணக்கு காட்டுவார்கள். இந்த உருட்டை வைத்துதான் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தை ரூ. 230 கோடி வசூல் என்று உருட்டினார்கள். இப்போது கூலி படத்தையும் அதேபோல் 1000 கோடி ரூபாய் வசூல் என உருட்ட தயாராகி விட்டார்கள் என்று அந்த பதிவில் ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்.





