நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ரவி மோகன் தற்போது, தயாரிப்பு மற்றும் இயக்கம் என புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று அவர் பெயர் வைத்துள்ளார். இதன் தொடக்க விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. நடிகர்கள் சிவகார்த்திகேயன் கார்த்தி அதர்வா எஸ் ஜே சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய சிவகார்த்திகேயன், நடிப்பை விட தயாரிப்பதிலேயே தனக்கு விருப்பம் என்றும், அதில் நிறைய சவால்கள் இருப்பதாகவும் சொல்லி இருந்தார். நிச்சயம் இருவரும் இணைந்து ஒரு படம் செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி சிவகார்த்திகேயனுடனும் கார்த்தியுடனும் ரவி மோகன் தனித்தனியாக ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இதில் முதலாவதாக, BRO CODE என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சந்தானத்தை வைத்து டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இதனை எடுக்கிறார்.
அடுத்ததாக, அன் ஆர்டினரி மேன் என்னும் திரைப்படத்தை ரவி மோகன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் கூடுதலாக அந்த திரைப்படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை ஜானரில் எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகி பாபு. இதற்கான அறிவிப்பும் வெளியானது.
இப்படியான சூழலில் தற்போது ப்ரோ கோட் திரைப்படத்திற்கான, ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் ரவி மோகனுடன், எஸ் ஜே சூர்யா மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகிய இருவர் நடித்திருக்கிறார்கள். இதே போல் ஸ்ரதா உட்பட மூன்று கதாநாயகிகள் படத்தில் நடித்துள்ளார்கள். மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.
மூன்று நிமிடங்களுக்கு மேலாக ஓடும் அந்த வீடியோவில், புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடலும் வருகிறது. திருமண வாழ்வில் இருந்து விடுபட தயாராகும் மூன்று ஹீரோக்களும், ப்ரோ கோட் என்ற வாய்ப்பு கிடைப்பது போல இந்த திரைப்படத்தின் கதை சொல்லப்படுகிறது. வீடியோவில் அதற்கான பின்னணி குரலை பிரதீப் ரங்கநாதன் கொடுத்திருக்கிறார். ப்ரோமோ வீடியோவே நன்றாக இருப்பதாக பலரும் சொல்லி வருகிறார்கள்.





