நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர். அவரது நடிப்பில் வருகிற 2025ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி தக்லைப் படம் ரிலீஸாக உள்ளது. மணிரத்னம் இயக்கி உள்ள இந்த படத்தில் கமலுடன் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். நாயகன் படத்துக்கு பிறகு மணிரத்னம், கமல் கூட்டணியில் இந்த படம் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
தக்லைப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் தனது 237வது படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்ப பயிற்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பும் கமல், அந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த பல படங்களில் அவரது காமெடி காட்சி பிரதானமாக இருக்கும். குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், சதிலீலாவதி, மகராசன், புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள், மும்பை எக்ஸ்பிரஸ் என பல படங்களில் கமல் காமெடி கேரக்டர்களில் அசத்தியிருப்பார்.
ஆனால் சமீபகாலமாக கமல்ஹாசன் ஆக்சன் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் மற்றும் இயக்குனர் ரமேஷ் கண்ணா, ஒரு நேர்காணலில் சில விஷயங்களை கூறியிருக்கிறார். கேஎஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனராக ரமேஷ் கண்ணா, சில படங்களில் கமலுடன் நடித்திருக்கிறார். தொடரும் என்ற அஜீத் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.
நடிகர் ரமேஷ் கண்ணா கூறியதாவது, கமலுக்கு எப்போதுமே காமெடி படங்களில் நடிப்பதுதான் ரொம்ப பிடிக்கும். காமெடி கதைகளை ரொம்பவும் விரும்புவார். அவரது படங்களுக்கு காமெடி எழுதியது கிரேஸி மோகன்தான். இப்போது அவரும் இல்லாததால் கமலுக்கு கை உடைந்தது போல் ஆகி விட்டது. அதனால்தான் தொடர்ந்து கமல் ஆக்சன் படங்களில் நடிக்கிறார்.
இல்லையென்றால் வருஷத்துக்கு 2 படம், இல்லேன்னா ஒரு படமாவது காமெடி படம் நடிப்பார். பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம் மாதிரியான படங்களில் நடிக்க கமல் ரொம்ப விரும்புவார். ரொம்பவும் க்யூமர் சென்ஸ் உள்ள ஆள் அவர். ஆனால் காமெடி படம் பண்ண அவருக்கு ஆளில்லை. அதுதான் உண்மை என்று நடிகர் ரமேஷ் கண்ணா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





