கடந்த 2005ம் ஆண்டில் நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை துவக்கினார். புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு நடிகர் விஜயகாந்துக்கு தமிழக அரசியல் களத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. திமுக அதிமுக என்ற 2 ஆளுமை மிக்க கட்சிகளை எதிர்த்த அவருக்கு முதல் சட்டசபை தேர்தலிலேயே அதிக சதவீத ஓட்டுகளும் கிடைத்தது.
தொடர்ந்து 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக அதிக தொகுதிகளை கைபற்றியது. திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியமைத்த அமைச்சரவையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக உடல் நலம் பாதித்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியல் செல்வாக்கை படிப்படியாக இழந்தார்.
பிறகு அவரால் சரியாக பேச முடியாமலும் நடமாட முடியாலும் வீட்டில் முழுநேர ஓய்விலும் மருத்துவர்கள் கண்காணிப்பிலும் இருந்தார். வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பலவிதமாக மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு நடந்த நிலையிலும் 2 ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் மறைந்தார். இப்போது தேமுதிகவை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பொதுச் செயலாளராக வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் தேமுதிகவுக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே சில மனக்கசப்புகள் இருந்து வருகின்றன. சமீபத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், விஜய் எங்க வீட்டு பையன். அவர் விஜயகாந்தை அண்ணா என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால் அரசியல் ரீதியாக விஜயகாந்தை அவர் பயன்படுத்த நினைத்தால் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று மறைமுகமாக எச்சரிக்கை செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, பிரஸ்கிட்ட நான் கேட்கிறேன். என்கிட்ட கேட்கறதுக்கு இதை தவிர வேற கேள்வியே இல்லையா? தமிழ்நாடு முழுக்க தெனமும் பிரஸ்சை சந்திக்கிறேன். இந்த ஒரு கேள்வியை தவிர வேற எதுவும் கேட்கவே மாட்டேங்கறீங்க.
ரெண்டே கேள்விதான். நான் தெனமும் பிரஸ்சை சந்திக்கிறேன். ஒண்ணு கூட்டணி பத்தி கேட்கறீங்க, இன்னொன்னு விஜய் பத்தி கேட்கறீங்க. இனிமே அந்த ரெண்டுக்கும் எங்கிட்ட யாரும் பதில் கேட்காதீங்க. பலதடவை அதுக்கு நான் பதில் சொல்லியாச்சு. நான் வந்தால் என்கிட்ட மக்கள் பிரச்னைகளை பத்தி கேளுங்க. மக்களுக்காக தான் இந்த அரசியல், மக்களுக்காக தான் இந்த ஆட்சி. மக்கள் நல்லா இருந்தா தான் இந்த நாடு நல்லா இருக்கும் என்று சற்று கோபமாக பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார்.





