தமிழ் சினிமாவில் இயக்குனரில் இருந்து நடிகராக மாறியவர் சசிகுமார். அமீரிடம் உதவியாளராக பணிபுரிந்த அவர், அங்கிருந்து தனது பயணத்தை தொடங்கினார். இவரது முதல் திரைப்படமாக 2010 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் படம் வெளியானது.
பீரியாடிக் திரைப்படமாக, மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் வெற்றி பெற்றது. ஒரு மிகச் சரியான கல்ட் கிளாசிக் திரைப்படம் என்றால் அது சுப்பிரமணியபுரம் தான் என்று இங்கு பலரும் கூறுவார்கள். அதேபோல் இந்த திரைப்படத்தை ட்ரெட் செட் என்றும் அந்த சமயத்தில் கூறி வந்தார்கள்.
இந்த திரைப்படம் வந்த பிறகு தான், ஹீரோ தாடி விட்டு வில்லன்களை நொறுக்கி எடுப்பதும், எதிர்பாராத சோக கிளைமாக்ஸ்களும் வர ஆரம்பித்தன. குறிப்பாக மதுரையை கதைக்களமாக கொண்டு ஏராளமான திரைப்படங்கள் இறங்க ஆரம்பித்தன. ஆனால் அது எதுவும் சுப்பிரமணியபுரம் படத்திற்கு அருகில் கூட வரவில்லை.
அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தில் தனது உழைப்பை காட்டி இருப்பார் சசிகுமார். ஒவ்வொரு காட்சியும் வெறி பிடித்தவர் போல் அவர் இயக்கி இருப்பார். குறிப்பாக அந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரையும் உலுக்கியது. இந்த திரைப்படத்திற்குப் பிறகு அவர் ஈசன் திரைப்படத்தை இயக்கினார்.
ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதனைத் தொடர்ந்து நாடோடிகள், சுந்தர பாண்டியன் என சசிகுமார் நடிகராக இடம்பெற்ற படங்கள் வெற்றி வாகை சூடின. இதனால் அந்த பாதையை தேர்வு செய்தார் சசிகுமார். ஆனால் இந்த முடிவு சசிக்குமாருக்கு பின்னடைவையே கொடுத்தது. நடித்த அத்தனை திரைப்படங்களும் தோல்வியை தழுவ அயோத்தி படம் மட்டும், அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
இந்த சூழலில் மீண்டும் அவர் இயக்கத்தின் பக்கம் கவனம் செலுத்த முடிவெடுத்து இருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் சசிகுமார் கூறியிருப்பதாவது, 2015 ஆம் ஆண்டு விஜய்யிடம் ஒரு கதை கூறினேன். அது வரலாற்று ரீதியிலான கதை. விஜய்க்கும் இது மிகவும் பிடித்திருந்தது. சில தயாரிப்பாளர்களின் பெயரை சொல்லி அவர்களிடம் போகச் சொன்னார். ஆனால் பட்ஜெட் மிகப்பெரியதாக இருந்ததால் அந்த சமயத்தில் அது கிளிக் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளார்.





