கோவையை சேர்ந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல சமையல் கலைஞர். சினிமா நடிகர்கள் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் விஐபிகள் வீட்டு திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் தான் பேமஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா நடிகராகவும் உள்ளார். மெகந்தி சர்க்கஸ் பென்குயின் உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் உள்ளார். மாதம்பட்டி ரங்கராஜூக்கும் ஸ்ருதி என்பவருக்கும் திருமணமாகி இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஸ்ருதி வக்கீலாக இருக்கிறார். இந்த சூழலில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா, தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜூக்கும் திருமணமாகி விட்டதாகவும், இப்போது 6 மாதங்கள் நான் கர்ப்பமாகவும் இருக்கிறேன் என்ற தகவலை இணையத்தில் பகிர்ந்தார்.
கடந்த 2018ம் ஆண்டில் திரைப்பட இயக்குனர் ஜே ஜே பெட்ரிக் என்பவரை ஜாய் கிறிஸில்டா திருமணம் செய்தார். பிறகு கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023ம் ஆண்டில் தனது கணவரை பிரிந்து விட்டதாகவும் ஜாய் கிறிஸில்டா அறிவித்திருந்தார். இந்த சூழலில் மாதம்பட்டி ரங்கராஜூக்கும் தனக்கும் திருமணம் நடந்ததாக கூறி வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் நான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறிய ஜாய் கிறிஸில்டா மருத்துவ பரிசோதனைக்காக சென்ற நேரத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, தங்கள் குழந்தைக்கு ராஹா என்ற பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார். மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்தது பெரிய குற்றம் என்று மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தன.
ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் இதுகுறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை. அவர் எந்த விளக்கமும் தரவில்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாய் கிறிஸில்டாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் அவர் டெலீட் செய்துவிட்டார். தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டார் என்றும் தன்னை கர்ப்பம் ஆக்கிவிட்டு இப்போது தன்னுடன் வாழ மறுப்பதாகவும் ஜாய் கிறிஸில்டா இன்று சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜாய் கிறிஸில்டா கூறியதாவது, நாங்கள் சில ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்தோம். அதற்கு பிறகு எம்ஆர்சி நகர் அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை. இந்த விஷயங்கள் இப்போது வெளியே தெரிந்த பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் என்னை சந்தித்து, கருவை கலைக்கச் சொல்லி தாக்கினார். தவறாகவும் நடந்து கொண்டார். என்னை அவர் சந்திக்க மறுக்கிறார். எனக்கும் என் கருவில் வளரும் குழந்தைக்கும் அவர் பதில் சொல்ல வேண்டும். என்னை ஏமாற்ற பார்க்கிறார் என்று அவர் கூறியிருக்கிறார்.





