நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு அனிருத் இசை மல்டிபில் ஸ்டார்ஸ் நாகர்ஜூனா அமீர்கான் உபேந்திரா சௌபின் சாஹிர் மற்றும் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் ரக்சிதா ராம் என ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் காணப்பட்டது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் முதல் நாளில் ரூ. 151 கோடி ரூபாய், 2ம் நாளில் ரூ. 230 கோடி 3ம் நாளில் ரூ. 310 கோடி 4ம் நாளில் ரூ. 404 கோடி என வசூலை அள்ளியது. சன் பிக்சர்ஸ் நிறுவனமே 4 நாட்களில் கூலி படம் 404 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஆனால் அதற்கு பின் கூலி படம் வசூலில் பின்தங்கியது. அடுத்த ஒரு வாரத்தில் கூலி படத்தில் வசூல் 450 கோடி ரூபாயை கூட தாண்ட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தான் வசூலில் முன்னேறியது. இதனால் கூலி படம் வசூல் 500 கோடியை தொடுவதற்கே 2 வாரங்கள் ஆகி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கூலி படம் வசூல் 501 கோடி ரூபாயை கடந்ததாக தகவல் வெளியானது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.0 மற்றும் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படங்களை தொடர்ந்து ரூ. 500 கோடி வசூலித்த 3வது படம் என்ற பெருமை கூலி படத்துக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த படம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு படமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கூலி படத்தில் வன்முறை காட்சிகளும் மதுபான காட்சிகளும் குறிப்பாக சடலங்களை எரிக்கும் காட்சிகளும் இருந்ததால் இந்த படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த படத்தை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் பேமிலி ஃஆடியன்ஸ் வருகை இல்லாததால் கூலி படத்துக்கு வசூல் பாதித்தது.
கடந்த மாதம் 14ம் தேதி வெளியான கூலி படம் 31ம் தேதி நேற்று வரை மொத்தம் 18 நாட்களில் ரூ. 510 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2 வாரங்கள் தாக்குபிடித்து தியேட்டர்களில் ஓடியிருக்கிறது. வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் கூலி படமே தியேட்டர்களில் ஓடியதும் ஒரு முக்கிய காரணம். அதே நேரத்தில் ரஜினி என்ற ஒருவரால் மட்டுமே ரூ. 510 கோடி வசூல் சாத்தியமானது என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.





