நகைச்சுவை நாயகன் என்ற பிம்பத்தில் இருந்து கதாநாயகன் என்னும் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார் சூரி. சொல்லப்போனால் அந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி தற்போது பெரிய உயரத்திற்கு அவர் சென்றுள்ளார் என்றே கூறலாம். சூரியின் நகைச்சுவை ஒரு கட்டத்திற்கு எடுபடாமல் இருந்த சூழலில், அந்த நேரத்தில்தான் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
குமரேசன் என்னும் காவலர் கதாபாத்திரத்தில் வாழ்ந்த அவர், இத்தனை நாட்களாக இப்படி ஒரு நடிப்பை வைத்துக்கொண்டா காமெடி செய்து வந்தார் என பலரும் கேட்கும் அளவுக்கு திறமையை காட்டினார். தொடர்ந்து விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் தனக்கு கொடுத்த போர்ஷனை சரியாக செய்திருந்தார் சூரி.
இதன் பிறகு பிஎஸ் வினோத்குமார் இயக்கத்தில் அவர் நடித்த கொட்டுகாளி திரைப்படமும் பெரிய அளவில் பேசப்பட்டது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் கொட்டுக்காளிக்கு தனி அந்தஸ்து கிடைத்தது. குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார் சூரி.
இப்படி தனது திறமைக்கு தீனி போடும் வகையிலான கேரக்டரில் நடித்து வந்த அவருக்கு, கருடன் என்னும் கமர்சியல் வெற்றி திரைப்படம் அமைந்தது. சசிகுமார் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் அதில் நடித்திருந்தாலும், ஹீரோ மெட்டீரியலாக சூரி பார்க்கப் பட்டார். வெற்றிமாறன் கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம், சினிமா விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து அண்மையில் வெளியான சூரியின் மாமன் திரைப்படமும் வெற்றி பட வரிசையில் அமைந்தது. உறவுகளுக்குள் எழும் சிக்கலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழ்நாட்டின் பி மற்றும் சி சென்டர்களில் சக்கை போடு போட்டது. இப்படி ஹீரோவாக உயர்ந்த பின்பு வெற்றி ஒன்றை மட்டுமே கொடுத்து வருகிறார் சூரி.
இந்த நிலையில் அவர் அடுத்ததாக இயக்குனர் ரவிக்குமாருடன் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நேற்று நாளை மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களை எடுத்திருக்கும் ரவிக்குமார், புதிய கதையோடு விஜய் சேதுபதிக்காக காத்திருந்தார். தற்போது இந்த திரைப்படம்தான் சூரிக்கு கை மாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. வழக்கம்போல அறிவியல் தொடர்பான கதையைதான் ரவிக்குமார் இதில் தொட போகிறாராம். டிசம்பர் மாதம் இதன் சூட்டிங் தொடங்கும் என்று பேசிக் கொள்கிறார்கள்.





