மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அந்த திரைப்படத்தில் ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒரு புள்ளியில் ஒன்றிணைத்து அதில் எந்த ஒரு விறுவிறுப்பும் குறையாமல் நேர்த்தியாக கதை கூறியிருந்தார். ஒரே நாளில் நடப்பது போன்று அந்த திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும். சொல்லப்போனால் மாநகரம் திரைப்படம்தான் லோகேஷ் கனகராஜிற்கு ஆகச் சிறந்த காவியம் என்று கூறலாம்.
இந்தப் படத்திற்கு ஜாவேத் ரியாஸ் என்பவர் இசையமைத்து இருந்தார். சொல்லப்போனால் படத்தில் பின்னணி இசையில் அவர் பட்டையை கிளப்பி இருந்தார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் ஒரு நாளில் நடைபெறும் கதை என்றால் கைதி திரைப்படம் ஒரே இரவில் நடைபெறும் கதை.
இதிலும் மாநகரம் திரைப்படம் போன்று, ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஒவ்வொரு கேரக்டரை கூறி மொத்தமாக அவர்கள் இணையும் இடத்தில் என்னென்ன களேபரங்கள் நடைபெறுகிறது என்று காட்டி இருந்தார். போதைப் பொருள்களை பறிமுதல் செய்து வைத்திருக்கும் காவல்துறை, அதனை மீண்டும் கையகப்படுத்த துடிக்கும் ரவுடி கும்பல், தற்செயலாக காவல்துறைக்கு உதவ நேரிடும் ஹீரோ என அந்த திரைப்படத்தின் கதை சங்கிலித் தொடராக பிணைக்கப்பட்டிருக்கும்.
அது மிகச் சரியாக ஒர்க் அவுட் ஆனதால், கைதி திரைப்படம் பட்டையை கிளப்பியது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்தது சாம் சி எஸ் இசை. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பின்னணி இசையில் கலக்கி இருப்பார் சாம் சி எஸ். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், இயக்கியிருந்த மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் அனிருத்தான் இசையமைத்திருக்கிறார்.
இந்த நிலையில் அண்மையில் பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ், தனது திரைப்படங்களுக்கு எப்போதும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று கூறியிருக்கிறார். எதிர்காலத்தில் அவர் இல்லாமல் படங்களை இயக்க மாட்டேன் என்றும் உறுதியாக பேசி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனால் கைதி படத்தில் இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டியளித்து இருந்த சாம் சி எஸ், கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்க லோகேஷ் கனகராஜ் தன்னை அணுகியதாக கூறியிருந்தார். இப்படியான சூழலில், அனிருத் பற்றி லோகேஷ் கனகராஜ் பேசியிருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து படக்குழுவே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





