இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நாளை மதராஸி படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் – ருக்மணி வசந்த் இணைந்து நடித்துள்ளனர். துப்பாக்கி அஞ்சான் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். மதராஸி திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை வெளியாகிறது.
சமீபத்தில் மதராஸி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, நான் இவ்வளவு ஆக்சன் காட்சிகளுடன் கூடிய படங்களில் நடித்ததில்லை. இது முற்றிலும் மாஸ் கமர்சியல் ஆக்சன் படமாக இருக்கும். ஏஆர் முருகதாஸ் ரொம்பவும் கூலான இயக்குனர். இந்த படத்தில் அரசியல் மெசேஜ் இல்லை.
அமரன் படம் பார்த்த ஒரு எதிர்பார்ப்பில் ரசிகர்கள் வருவார்கள் என்பது உண்மைதான். மதராஸி படத்தை பார்த்த பிறகு அவர்களின் ரியாக்சன் பார்க்க வெயிட் பண்ணுகிறேன். நடிகர் ரஜினிகாந்தின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுகிறேன். காமெடி படங்களில் மட்டுமல்லாமல் எல்லா வகையான படங்களிலும் நடிக்க ஆசைதான்.
யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை. நான் என்னுடைய இடத்தில் இருக்கிறேன். அடுத்து நான் நடிக்கும் பராசக்தி படம் 60களில் நடக்கும் கதையாக உருவாகி உள்ளது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். சமீபகாலமாக நடிகர் விஜய் இடத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்துவிட்டார் என்று பலரும் கூறி வருவதால், இந்த விளக்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அடிக்கடி கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்தின் பயோபிக் உருவாக வேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் நீண்டகால கனவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அவர் தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுத உள்ளதாகவும் தகவல் உள்ளது. ஆனால் அவரது வாழ்க்கை வரலாறு புத்தகமாக மட்டும் வராமல் ஒரு திரைப்படமாக வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அதுவும் ரஜினியின் தீவிர ரசிகராகவும் ரஜினியின் மேனரிஸம் முகத்தோற்றமும் உடல் பாவனையும் கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இளம் வயது ரஜினியாக நடித்தால் மிகவும் அற்புதமாக இருக்கும். அருமையான ஒரு படமாகவும் அது அமையும். அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனது வைத்தால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் வரலாற்று படம் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.





