விஜய் டிவியில் கடந்த 8 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டில் பிக்பாஸ் சீசன் 9 வரும் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்குகிறார்.சில தினங்களுக்கு முன்பு 15 வினாடிகள் கொண்ட பிக்பாஸ் சீசன் 9 பிரமோ வீடியோ வெளியானது.
தற்போது பிக்பாஸ் சீசன் 9 க்கான முன் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. பிக்பாஸ் வீடு செட் அமைக்கும் பணி ஏற்கனவே துவங்கி விட்டது. வரும் அக்டோபரில் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியலும் வந்துவிட்டது. அந்த பட்டியலில் போட்டியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இனியா, டான்சர் சிந்தியா வினோலின், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன், நடிகர் பாலசரவணன், டிவி சீரியல் நடிகர் புவியரசு, சீரியல் நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் வினோத் பாபு, குக் வித் கோமாளி 6 போட்டியாளர் ஷபானா ஷாஜகான், டிவி சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர்.
சமீபத்தில் பிரபலமான கூமாபட்டி தங்கபாண்டி, காஷ்மீர் தமிழன் உமர் லத்தீப், விஜே பார்வதி, மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா, சோசியல் மீடியா பிரபலம் அரோரா, என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஹீரோ அஸ்வின் குமார், திருமணம் சீரியல் நடிகர் சித்து ஆகியோரும் பிக்பாஸ் போட்டியாளர்களாக இந்த முறை பங்கேற்க உள்ளனர்.
இதற்கிடையே வாட்டர் மெலன் ஸ்டார் டாக்டர் திவாகர், குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜூம் இந்த 9வது சீசனில் பிக்பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வாட்டர்மெலன் திவாகரை வைத்து சமாளிக்க முடியாது என்பதாலும், மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமண சர்ச்சையில் சிக்கி இருப்பதாலும் அவர்கள் போட்டியாளர்களாக வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலசரவணன் ஒருவரை தவிர திரைப்பட நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. டிவி சீரியல் மற்றும் செலிபரட்டிகளை மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புகின்றனர். இந்த முறை பொதுமக்களில் சிலரும் போட்டியாளர்கள் என்று கூறப்பட்டாலும் அப்படி யாருடைய பெயரும் இல்லை. ஒருவேளை சஸ்பென்ஸ்சாக சிலர் போட்டியாளராக கடைசி நேரத்தில் களத்தில் இறக்கிவிட வாய்ப்புள்ளது.





