பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இந்தியில் பல படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகை. தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் விஜயுடன் ஆடியிருந்தார். அதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை தான்.
இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் இணைந்து பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தை நடத்தி வந்தனர். 2015 மற்றும் 2024ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்த நிறுவனத்தை விரிவு படுத்துவதற்காக ஜூகுவை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவரிடமிருந்து 60 கோடி ரூபாய் வாங்கி உள்ளனர்.
அதிக வட்டி செலுத்துவதை தவிர்க்க அந்த பணத்தை முதலீடு செய்வதாகவும் அசல் தொகையை லாபத்துடன் திருப்பித் தருவதாகவும் தீபக் கோத்தாரியிடம் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் கடன் வாங்கிய பிறகு ஷில்பா ஷெட்டி நிறுவனத்தின் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் நிறுவனத்திற்கு எதிரான திவால் நடவடிக்கைகளை தொழிலதிபர் கோத்தாரியிடம் இருந்து மறைத்து இருவரும் அந்த பணத்தை தங்கள் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தொழிலதிபர் தீபக் கோத்தாரி அளித்த புகாரின்பேரில் கடந்த மாதம் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் மும்பை காவல்துறையின் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
நடிகை ஷில்பா ஷெட்டி தம்பதி அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்க இந்த லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் மூடப்படுவதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய நடிகை ஷில்பா ஷெட்டி கூறுகையில், இந்த செய்தி எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அதேவேளையில் சிரிப்பாவும் இருக்கிறது.
இந்த தகவலில் எந்த உண்மையும் கிடையாது. நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வரும் இடத்துக்கு அருகே புதிய தென்னிந்திய உணவுகள் சுடச்சுட கிடைக்கும் வகையில் புதிய உணவகத்தை திறக்க முடிவு செய்திருக்கிறோம். மேலும் எனது ஓட்டலின் புதிய கிளை ஜூகு பகுதியில் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். இப்படி எங்கள் தொழில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் நேரத்தில் எங்களிடம் இப்படி கேட்கலாமா என்றும் அவர் கூறியிருக்கிறார்.





