சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதராசி திரைப்படம், கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யப்பட்டது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ருக்மணி வசந்த், பிஜு மேனன், விக்ராந்த், வித்யூத் ஜமால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.
முதல் பாதியில் காதல் கலந்த ஆக்சன் காட்சிகள் இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளை இடம்பெற்று இருக்கிறது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் நடைபெறும் ஆயுதங்கள் கடத்தல், அதனை தடுக்க போராடும் சிறப்பு படைப்பிரிவு, இதற்கு நடுவில் மாட்டிக்கொள்ளும் இளைஞர் என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து இதனை இயக்கி இருக்கிறார் முருகதாஸ்.
முருகதாஸின் முந்தையத் திரைப்படங்கள் ஆன ஸ்பைடர், சர்கார், தர்பார் ஆகிய திரைப்படங்களை விட இது நன்றாகவே இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக சண்டை காட்சிகள் நன்றாக வந்திருப்பதாகவும், வில்லன் வித்யூத் வரும் காட்சிகள் மாஸாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 12 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருக்கிறது.
இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படமான பராசக்தியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். சுதா கொங்கரா இயக்கி வரும் இந்த திரைப்படத்தில், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரவி மோகன் முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லனாக வருகிறார். 1960களில் நடைபெறும் கதைக்களம் போன்று இது எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை காரைக்குடி சிதம்பரம் இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது. நடுவே, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எழுந்த பிரச்சனை காரணமாக இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது. தற்போது இதன் பணிகளை மீண்டும் தொடங்கியிருக்கிறார் இயக்குனர் சுதா. பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
இப்படியான சூழலில், விருது நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். மேடையில், தெலுங்கு நடிகர் ராணாவும் இருக்க, இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக தெரிவித்தார் சிவகார்த்திகேயன். இப்போதைக்கு இதை மட்டும்தான் கூற முடியும், படம் ரிலீஸ் ஆகும் தருவாயில் மேலும் பேசுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். நிச்சயமாக அது பராசக்தி திரைப்படமாகதான் இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.





