தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் மற்றும் விடுதலை ஆகிய திரைப்படங்கள் என்றும் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் இருக்கும். அதிலும் குறிப்பாக வட சென்னை திரைப்படத்தை, ரசிகர்கள் இன்றுவரை புகழ்ந்து கொண்டே இருக்கின்றனர்.
வடசென்னை திரைப்படம் வெளிவந்ததிலிருந்து, வெற்றிமாறன் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கு அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்று பலரும் கேள்வி கேட்டே வருகின்றனர். அப்போது கிடைக்கும் நேரத்தில் நிச்சயம் எடுப்பேன் என்று வெற்றிமாறன் பதில் கூறுவார். இதேபோல் தனுஷ் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அங்கேயும், வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய கேள்வி இருக்கும்.
இப்படியான சூழலில் அண்மையில் சிலம்பரசன் உடன் வெற்றிமாறன் இணைய போவதாக வெளியான அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ் திரை உலகையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது. கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இதற்கான ப்ரொமோ சூட்டிங் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அதில் சிம்புவுடன் இயக்குனர் நெல்சனும் பங்கேற்றார்.
அதுவே இங்கு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை வெற்றிமாறன் இயக்கத்தில் நெல்சன் நடிக்கப் போகிறாரா என்று கேள்வி எழுப்பினர். பலரும் இது வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம்தான் என்று கூற, அது தொடர்பாக வெற்றிமாறன் விளக்கம் அளித்தார். அதில் இந்த திரைப்படம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும் அதே சமயம் வடசென்னை உலகத்தில்தான் இது இருக்கும் எனவும் கூறியிருந்தார்.
வட சென்னையில் இடம் பெற்ற முக்கியமான கதாபாத்திரங்கள் இதிலும் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் சிம்பு நடிக்கும் இந்த திரைப்படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த நேரத்தில் வெற்றிமாறன் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகிறது.
அதில் அவர் கூறியிருப்பதாவது, வடசென்னையில் சிம்புவுக்கும் ஒரு கதாபாத்திரத்தை எழுதியிருந்தேன். இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ஒருவன் கல்லூரிக்கு சென்று படிக்க, மற்றொருவரின் பாதை மாறிப் போகிறது. இருவரும் சந்திக்கும்போது என்ன நடக்கிறது என்று சொல்லலாம் என நினைத்திருந்தேன் என்று கூறியிருக்கிறார். ஒருவேளை இந்தக் கதையை மையப்படுத்திதான் வெற்றிமாறன், சிம்பு உடலான படத்தில் இயக்கத்தில் இறங்கி இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அப்படி என்றால், நிச்சயம் சிம்பு மற்றும் தனுஷ் இணைந்து நடிப்பது போன்ற காட்சிகளை எதிர்காலத்தில் வெற்றிமாறன் வைப்பார் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





