இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு சிறந்த படைப்பாளி. இயக்குனர் இமயமாக போற்றப்படும் அவர் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர். அவர் இயக்கிய பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றவை. 16 வயதினிலே கடலோர கவிதைகள் முதல் மரியாதை கிழக்கு சீமையிலே வேதம் புதிது கருத்தம்மா கிழக்கே போகும் ரயில் என பல படங்களை சொல்லலாம்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு பாரதிராஜா இயக்கிய சில படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. தாஜ்மகால் ஈரநிலம் கடல் பூக்கள் அன்னக்கொடி கண்களால் கைது செய் உள்ளிட்ட படங்கள் தோல்வியடைந்தன. அதன்பிறகு இயக்குவதை குறைத்துக்கொண்ட அவர் படங்களில் நடிக்க துவங்கி விட்டார். சிறந்த குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான படம் 16 வயதினிலே. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. இந்த சூழ்நிலையில் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் யாரும் இந்த படத்தை வாங்க விரும்பவில்லை. விளையாட்டுப் பையன் மாதிரி நடிச்சிக்கிட்டு இருந்த கமல்ஹாசனை இப்படி கோவணம் கட்டி, வெத்தல பாக்கு போட வச்சி அசிங்கப்படுத்திட்டாங்க, அப்புறம் எப்படி படம் ஓடும் என்பதுதான் அவர்கள் சொன்ன ஒரே காரணம்.
அப்படி இருந்தும் ஒரு விநியோகஸ்தர் மிகப்பெரிய என்எஸ்சி எனப்படும் வடக்கு ஆற்காடு தெற்கு ஆற்காடு செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய ஏரியாவை வாங்க முன் வந்துள்ளார். ஆச்சர்யம் தாங்க முடியாத இயக்குனர் பாரதிராஜா, நிஜமாகவே வாங்கப்போறீங்களா? உண்மையிலேயே உங்களுக்கு படம் பிடிச்சிருக்கா?” என்று அவரிடம் கேட்டுள்ளார்.
இந்த படத்தில் ஒரு அடிப்படையான கருத்தைச் சொல்லியிருக்கீங்க. ஆளை பாக்காதே. ஆடையை பாக்காதே. மனசை மட்டும் பாரு… இது, கிராமத்தில் இருந்து பட்டணம் வரைக்கும் எல்லாருக்கும் தேவையான ஒரு கருத்து இது. எல்லா ஜனங்களுடைய மனசுக்கும் தெரிஞ்ச விஷயம். அதனால இந்தக் கருத்து ஜெயிக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று அந்த விநியோகஸ்தர் பதிலளித்துள்ளார்.
அதன்பிறகு 16 வயதினிலே படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெறறது. அப்படி அந்த படத்தை முன்வாங்க வந்த விநியோகஸ்தர் காதர் மொய்தீன். அவர்தான் நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்த ராஜ்கிரண். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்த அவர்தான் பின்னாளில் என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆனார். பல படங்களில் ஹீரோவாக நடித்த பிறகு சமீபகாலமாக குணச்சித்திர நடிப்பில் ராஜ்கிரண் அசத்திக் கொண்டிருக்கிறார்.





