தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நல்ல நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். ட்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்கிரிப் ரைட்டர் உதவி இயக்குனர் குறிப்பாக மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல அடையாளங்கள் மணிகண்டனுக்கு உண்டு. இப்போது தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் இளம் நடிகராக நல்ல படங்களை தேர்வு செய்து சிறந்த படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மணிகண்டன் தந்து வருகிறார்.
விக்ரம் வேதா காதலும் கடந்து போகும் ஏலே நெற்றிக்கண் காலா ஜெய்பீம் குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் இப்போது இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் மக்கள் காவலன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
எந்த படத்தில் எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து விடுபவர் மணிகண்டன். குறிப்பாக கடைசியாக வெளிவந்த குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. ஒரு நடுத்தர குடும்பஸ்தனின் அவலங்களை மிக அற்புதமாக அவர் திரையில் வெளிப்படுத்தி இருந்தார்.
இப்போது மக்கள் காவலன் என்ற படத்தில் மணிகண்டன் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்துவரும் நடிகர் மணிகண்டனுக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தாலும் தனக்கான கதைகளை தேர்வு செய்வதில் அவர் அதிக கவனம் செலுத்துகிறார். கேரக்டர்களை பார்த்து பார்த்து செய்து நடிக்கிறார். அந்த வகையில் மக்கள் காவலன் படமும் அவருக்கு ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர்தான் டைரக்ட் செய்கிறார். மக்கள் காவலன் படத்தில் மணிகண்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் கம்பீரமான ஒரு கெட்டப்பில் நடித்திருக்கிறார். இதே மணிகண்டன் ஜெய்பீம் படத்தில் ஒரு கொடூரமான போலீஸ் அதிகாரியிடம் விசாரணை என்ற பெயரில் சிக்கிய போது அவரை அடித்து துன்புறுத்தப்படும் காட்சிகளை ரசிகர்களால் மறக்க முடியாது.
இப்போது நடிகர் மணிகண்டனே போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கிறார். இதில் அவரது கேரக்டர் பெயர் அம்பேத்கர் என்று சொல்லப்படுகிறது. நான்கு கிராமங்களை உள்ளடக்கிய அந்த போலீஸ் ஸ்டேஷனில் அம்பேத்கர் என்ற கேரக்டரில் அவர் நடித்திருப்பதால் இது ஜாதிய பிரச்னைகளை மையப்படுத்திய ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கும் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது.





