நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தை, விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே போடா போடி திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும், நானும் ரவுடிதான் திரைப்படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி சபாஷ் போட வைத்திருந்தார் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து அவர் எடுத்த, தானா சேர்ந்த கூட்டம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டது.
இந்த சூழலில் அஜித் – விக்னேஷ் சிவன் காமினேஷன் எப்படி இருக்கும் என்று கற்பனை கோட்டை கட்டி வந்தனர் ஏகே ரசிகர்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில், அஜித்தின் 62 ஆவது படத்தின் ப்ராஜெக்ட் இல் இருந்து விலகினார் விக்னேஷ் சிவன். தயாரிப்பு நிறுவனத்திற்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
இதன்பிறகு, ப்ராஜெக்டிற்குள் இயக்குனர் மகிழ் திருமேனி வந்தார். க்ரைம் திரில்லர் படங்களை எடுப்பதில் கெட்டிக்காரரான அவர், அஜித்துடன் இணைந்து இருப்பதால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. இந்தப் படமும் நிச்சயம் கிரைம் திரில்லராகதான் இருக்கும் என ஆருடம் கூறிய அஜித் ரசிகர்கள், படத்திற்கான அப்டேட்டுகளுக்கு காத்திருந்தனர்.
ஆனால் விடா முயற்சி என படத்தின் பெயர் வைக்கப்பட்டதோடு சரி, அதன் பிறகு எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படாமலேயே இருந்தது. அஜித் குமார் எதையும் கண்டுகொள்ளாமல் பைக்கில் ஊர் சுற்றுவதாலேயே சூட்டிங் பணிகள் பாதிக்கப்படுவதாக பலர் குறை கூறினர். ஒரு கட்டத்தில் திரைப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அதனை மறுத்த லைக்கா நிறுவனம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்தது.
இந்த நிலையில் துபாயில் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும், இதற்காக நடிகர் அஜித்குமார் மற்றும் த்ரிஷா ஆகியோர் அங்கு உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் அஜித்துக்கு வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், துபாயில் நடிகர் அஜித் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனை இணையத்தில் பகிர்ந்து வரும் ஏகே ரசிகர்கள், வில்லன் சஞ்சய் தத்தான் என்று உறுதி செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.





