நடிகர் விஜய் கடந்தாண்டில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக தீவிர அரசியல் களத்தில் இருந்து வருகிறது. விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரண்டு அரசியல் மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டிய அவர் இப்போது உங்க விஜய் நா வரேன் என்று மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
திமுகவை தனது அரசியல் எதிரி என்றும் பாஜகவை தன்னுடைய கொள்கை எதிரி என்றும் பகிரங்கமாக அறிவித்துவிட்ட நடிகர் விஜய் இப்போது மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறார். இதுவரை திருச்சி அரியலூர் நாகை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் பேசியிருக்கிறார்.
விஜய் இந்த பயணத்தின் போது அந்தந்த மாவட்டத்தில் உள்ள அடிப்படை பிரச்னைகளை மக்கள் குறைகளை நேரடியாக பேசுகிறார். மேலும் திமுக பாஜக அரசுகள் குறித்தும் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக திமுகவை மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை தந்து நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டம் என்றும் கடுமையாக சாடுகிறார்.
நடிகர் விஜய் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் திரண்டு வருகிறது. எம்ஜிஆர் விஜயகாந்துக்கு பிறகு நடிகர் விஜய்க்கு மட்டும்தான் மக்கள் கூட்டம் தானாக திரண்டு வருகிறது. திமுக அதிமுக தவிர்த்து மாற்று அரசியலை விரும்பும் மக்கள் பலரும் விஜய்க்கு தான் ஆதரவு தருகின்றனர் என்று அரசியல் விமர்சகர்களும் பேசத் துவங்கி விட்டனர். 2026 தேர்தலில் பெரிய மாற்றம் வரும் என்றும் அவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் துவக்கத்தில் செப்டம்பர் மாதம் 13ம் தேதி துவங்கி டிசம்பர் 20ம் தேதி வரை 4 மாதங்களுக்கு சனிக்கிழமை தோறும் 3 மாவட்டங்கள் வரை மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்வதாக அறிவித்து இருந்தார். ஆனால் இப்போது அது நடைமுறை சாத்தியமில்லை என்று தெரிந்துவிட்டது. திரண்டு வரும் மக்கள் கூட்டத்தால் ஒரு நாளில் விஜய் 2 மாவட்டம் மட்டும்தான் பயணம் மேற்கொள்ள முடிகிறது.
அதனால் டிசம்பர் 20ம் தேதி என்பதை அடுத்த 2026ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி வரை 2 மாதங்கள் கால அவகாசம் நீட்டித்து விஜயின் சுற்றுப்பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 3 மாவட்டங்கள் என்பதை மாற்றி வாரந்தோறும் சனிக்கிழமை 2 மாவட்டங்களில் மட்டுமே விஜய் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதனால் மாற்றப்பட்ட புதிய பயண திட்டத்தின்படி மாவட்டங்களுக்கு விஜய் வருகை சில வாரங்கள் தள்ளி போயிருக்கிறது. அதே நேரத்தில் பிப்ரவரி 20ம் தேதி வரை இந்த மக்கள் சந்திப்பு பயணங்களை விஜய் மேற்கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





