இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் கதாசிரியர் என பெரிய அளவில் புகழ் பெற்றவர் கே பாக்யராஜ். புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். தனது குருவாக எம்ஜிஆரை ஏற்றுக்கொண்டவர். என்னுடைய கலைவாரிசு என்று எம்ஜிஆரே ஒருமுறை கே பாக்யராஜை அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது அதிமுக தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசியவர் கே பாக்யராஜ். அத்துடன் அமெரிக்காவில் எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவர் தன்னை நேரில் வந்து பார்க்க அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் கே பாக்யராஜ் மட்டும்தான். வேறு யாரையும் எம்ஜிஆர் தன்னை சந்திக்க அனுமதிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, ஒருமுறை நானும் என் மனைவியும் எங்களது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு எம்ஜிஆர் வீட்டுக்கு ஆசிர்வாதம் வாங்குவதற்காக சென்றோம். அப்போது சாந்தனு கைக்குழந்தை. என்னுடைய பொண்ணு அம்முவுக்கு 3 வயது இருக்கும். அப்போது வீட்டில் சுவரில் இருந்த எம்ஜிஆர் போட்டோவை பார்த்த அம்மு, எம்ஜிஆர் தாத்தா என்று சொன்னது.
அதைப்பார்த்த ஆளுங்க, என்ன சார் இப்படி குழந்தை சொல்லுது? சார் மாமா என்றுதான் எல்லோரும் சொல்றது வழக்கம். எம்ஜிஆரை தாத்தா என்று யாரும் சொன்னது இல்லே என்று அதிர்ச்சியாக கூறினர். அதற்கு நான், எனக்கு எம்ஜிஆர் அப்பா மாதிரி என்றால் என் மகளுக்கு அவர் தாத்தா மாதிரி தானே? அப்படி குழந்தை சொல்வதில் என்ன இருக்கிறது என்று பேசிக்கொண்டு இருந்தேன்.
அப்போது எம்ஜிஆரும் ஜானகி அம்மாவும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். அப்போது என் மகள் அம்மு எம்ஜிஆர் தாத்தா என்று சொல்ல அப்படியே குழந்தையை வாரி அணைத்து எடுத்துக்கொண்டார் எம்ஜிஆர். அவரது கண்கள் கலங்கி விட்டது. அவருடைய பீலிங்கே வேற. குழந்தைக்கு கட்டிப்பிடிச்சு முத்தம் எல்லாம் கொடுத்தார்.
சின்னக்குழந்தைக்கு தான் தங்க செயின் எடுத்து வெச்சிருக்காங்க. அப்போ பாக்கெட்ல இருந்த தங்க செயினை காணோம். நான் எடுக்கலே. மேலே இருக்கும் போய் எடுத்துட்டு வான்னு ஜானகியம்மா கிட்ட சொல்லி எடுத்துட்டு வரச் சொன்னார். இல்லையே, நீங்க எடுத்து வெச்சிங்களேன்னு சொல்லிட்டே ஜானகியம்மா போய் இன்னொரு செயினை எடுத்துட்டு வந்தாங்க. அந்த தங்க செயினையும் அப்புறம் அவர் பாக்கெட்டுல இருந்த இன்னொரு தங்க செயினையும் எடுத்து 2 குழந்தைகளுக்கும் கழுத்தில் போட்டார். என்னங்க இது உங்க பாக்கெட்டுல செயின் இருக்குதேன்னு நான் கேட்டதுக்கு ஒரு குழந்தைக்கு போட்டா 3 வயசு இருக்கிற இந்த குழந்தை மனசு, என்ன நமக்கு போடலையேன்னு பொக்குன்னு நினைக்கும். அதுதான் இன்னொன்று எடுத்துட்டு வரச் சொன்னேன் என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை கே பாக்யராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





