கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா மற்றும் காந்தாரா சாப்டர் 1 ஆகிய படங்களை டைரக்ட் செய்து அவரே 2 படங்களிலும் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படங்களின் அபார வெற்றிகளின் மூலம் இன்று தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நட்சத்திர நடிகராகவும் நட்சத்திர இயக்குனராகவும் அவர் மாறிவிட்டார்.
மொத்தம் ரூ. 15 கோடி பட்ஜெட்டில் 2022ம் ஆண்டில் உருவான காந்தாரா படம் உலகம் முழுவதும் அபார வரவேற்பை பெற்று ரூ. 400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்போது ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரூ. 130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிய காந்தாரா சாப்டர் 1 படம் ரிலீஸான 6 நாட்களில் ரூ. 400 கோடி வசூலை கடந்து போய்விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த படம் ரூ. 1000 கோடி வசூலை அள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நடிகர் விஜய் கரூரில் நடத்திய தவெக பொதுக்கூட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் தவெக கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுக்குழு மற்றும் விசாரணை கமிஷன் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
கரூரில் நடந்த இந்த துயர சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பங்கேற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி கூறியதாவது, இந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஒரு தனிநபரின் தோல்வி அல்ல. இது ஒரு பொதுவான தவறு. இது ஒரு தனி நபரின் தவறாக நான் நினைக்கவில்லை. ஒருவேளை இது பலரால் செய்யப்பட்ட ஒரு கூட்டு தவறாக கூட இருக்கலாம்.
ஆனால் இதை கட்டுப்படுத்தி இருக்கலாம். அது நடக்காமல் போனதால்தான் அதை ஒரு விபத்து என்று சொல்கிறோம். இது வேண்டுமென்றே நடந்ததல்ல. ஒரு ஹீரோவையோ அல்லது அவரது கேரக்டரையோ நாம் விரும்பினால் நாம் அவரது ஹீரோயிசத்தை பின்பற்றுகிறோம். அதைப்பற்றி நான் எப்படி கருத்து சொல்ல முடியும்? இதுபோன்ற விபத்துகள் நடக்கும்போது அது துரதிஷ்டவசமானது. அங்கு சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து கடினமான இத்தகைய சூழ்நிலையில் போலீஸ் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களை மட்டும் முழுவதுமாக குறை சொல்வது பயனற்றது. நாம் எளிதாக காவல்துறையையோ அல்லது அரசாங்கத்தையோ குறை சொல்லலாம். அவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது. ஆனால் சில சமயங்களில் ஒரு கும்பலை கட்டுப்படுத்துவதில் அவர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று நடிகர் ரிஷப் ஷெட்டி அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





