தமிழக அரசியல் களத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஆதரவை பெற்றவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் தான். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது சில செயல்பாடுகளாலும் கட்சியை சரியான முறையில் கொண்டு செல்லாததாலும் அரசியலில் அவரால் பெரிய வெற்றிகளை பெற முடியாமல் போனது.
இப்போது எம்ஜிஆர் விஜயகாந்த் வரிசையில் அடுத்ததாக அரசியல் களத்தில் குதித்திருப்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக களத்தில் உள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு இருக்கிறது. இந்த ஆதரவு எல்லாம் வரும் தேர்தலில் தவெகவுக்கு ஓட்டுகளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஆளுங்கட்சி திமுகவுக்கு அவரது அரசியல் பிரவேசம் பெரிய பின்னடைவை தந்துவிடுமோ என்ற ஒரு கலவரமான சூழலும் நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் வடிவேலு திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு அன்பில் மகேஷ் மற்றும் அ ராசா உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் கொட்டு மழையில் மழையை பிடித்தபடி பேசிய நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவான தனது கருத்துகளை தெரிவித்தார். அப்போது வடிவேலு பேசியதாவது, திமுக வருகிற 2026 தேர்தலில் நிச்சயமாக உறுதியாக வெற்றி பெறும். அதில் சந்தேகமே கிடையாது. மீண்டும் ஸ்டாலின்தான் தமிழகத்தின் முதல்வர், உதயநிதி தான் துணை முதல்வராக இருப்பார்கள்.
எனக்கு அருகில் நிற்கும் அமைச்சர்கள் எல்லாம் அரசியலை கரைத்து குடித்த ஜாம்பவான்கள். அவர்களிடம் போட்டியில் யாரும் ஜெயிக்கவே முடியாது. வருகிற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி என்பது நிச்சயம். அதற்கு மேல் வருவது என்பது நமது லட்சியம் என்று கலகலப்பாக பேசினார். கடந்த முறை விஜயகாந்துக்கு எதிராக தேர்தல் களத்தில் திமுகவால் இறக்கப்பட்டவர் நடிகர் வடிவேலு.
அதனால் அவரது சினிமா கேரியரே பாதித்தது. இந்த முறை விஜய்க்கு எதிராக பேச அவரை திமுக வருகிற தேர்தல் களத்தில் இறக்கிவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தவெக தலைவர் விஜய்க்கு எதிரான வடிவேலுவின் கிண்டல் பேச்சு, தமிழக மக்களிடம் சரியாக எடுபடுமா? திமுகவுக்கு அதிகமான ஓட்டுகளை அது பெற்றுத் தருமா என்பதுதான் சந்தேகமாக உள்ளது. மேலும் விஜய்க்கு எதிராக பேசி தளபதி ரசிகர்களின் எதிர்ப்பை சந்திக்க வடிவேலு இந்த முறை விரும்ப மாட்டார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.





