இன்றைய காலகட்டத்தில் சமூகவலைதளங்களின் வாயிலாக சிலர் பெரிய அளவில் மக்கள் மத்தியில் அடையாளமும் வரவேற்பும் பெற்று விடுகின்றனர். பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டிவிட்டர் யூடியூப் என சிலர் எதையாவது செய்து மக்கள் மத்தியில் தங்கள் முகத்தை பிரபலப்படுத்தி விடுகின்றனர். ஒருகட்டத்தில் அதுவே அவர்களது வாழ்க்கை பயணத்தை மாற்றிவிடுகிறது.
சமீபத்திய உதாரணமாக வாட்டர்மெலன் ஸ்டார் நடிப்பு அரக்கன் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் திவாகர் என்பவரை குறிப்பிட்டுச் சொல்லலாம். கடைசியில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராகவும் சென்று வந்துவிட்டார். அவரை இந்தளவுக்கு உருவாக்கிய சமூக வலைதளங்கள்தான்.
அதேபோல் ஏங்க இங்க பாருங்க என்று கூமாபட்டி ஏரி தண்ணீர் குறித்து குளித்துக்கொண்டே வீடியோ கூமாபட்டி தங்கபாண்டி இன்று டிரண்டிங்கில் இருக்கிறார். அதிலும் ஜீ5 சானலில் அவரை ஒரு முக்கிய போட்டியாளராக கொண்டு வந்து இப்போது அவர் தெரியாத ஆட்களே இல்லை என்கிற அளவுக்கு வைரலாகி விட்டார்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் வலைதளம் வாயிலாக பிரபலமானவர்தான் ஜூலி. சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு இணையத்தில் வைரலானவர் ஜூலி. அவர் ஆர்ப்பாட்டத்தில் போட்ட கூவல்தான் அவரை டிரண்டிங் ஆக மாற்றியது. அதன்பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1ல் போட்டியாளராக ஜூலி கலந்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலிக்கு நல்ல அறிமுகமும் வரவேற்பும் கிடைத்தாலும் கடும் விமர்சனங்களையும் அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் ஜூலி சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் மக்கள் மத்தியில் ஜூலிக்கு வரவேற்பும் ஆதரவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஜூலிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஜூலி அதில் பதிவிட்டுள்ளார். ஆனால் அதில் தனது வருங்கால கணவருடைய முகத்தை காட்டவில்லை. அவர் யார் என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. கணவர் முகத்தை காட்டாமல் மறைப்பதில் என்ன சீக்ரட் இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜூலிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





