கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த படங்கள் பலமுறை டிவியில் ஒளிபரப்பு ஆனதாகஇருந்தாலும் தியேட்டர் அனுபவம் வேண்டும் என்பதற்காகவே அந்த படத்தை தியேட்டரில் பார்க்க பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த கில்லி படம் 2 ஆண்டுகளுக்கு முன் ரி ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. அதேபோல் விஜய் நடித்த சச்சின் படத்திற்கும் ரசிகர்களிடம் பெரிய ஆதரவு கிடைத்தது. அதேபோல் ரஜினி கமல் அஜீத் என முன்னணி நடிகர்கள் நடித்த ஹிட் படங்கள் அவ்வப்போது தொடர்ந்து திரைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
வருகிற 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாளில் அவர் நடித்த படையப்பா படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 1999ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகும். இதில் ரஜினிக்கு அப்பாவாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். நீலாம்பரி கேரக்டரில் நடித்த நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு இந்த படம் பெரிய அளவில் பாராட்டை பெற்றுத் தந்துது.
இதற்கிடையே கடந்த 2005ம் ஆண்டில் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் கருணாஸ் குணால் சத்யன் மயில்சாமி உள்ளிட்டோர் நடித்த படம் தேவதையை கண்டேன். அந்த காலகட்டத்தில் தேவதையை கண்டேன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.
இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது இந்த படத்தை ரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் காஜா மைதீன் இந்த படத்தை விரைவில் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறோம் என்று உறுதிப்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே நடிகர் தனுஷ் நடித்த 3 மயக்கம் என்ன அம்பிகாவதி ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சைக்கிளில் டீ விற்கும் ஒரு வாலிபராக தனுஷ் நடித்திருப்பார். தன்னை காதலித்து விட்டு பிறகு ஏற்க மறுக்கும் காதலி மீது கோர்ட்டில் வழக்கு தொடரும் வித்யாசமான ஒரு கேரக்டரில் தனுஷ் நடிப்பு அதிக பாராட்டை பெற்றது.





