தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். இப்போது தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இப்போது அந்த நிறுவனத்தை உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி சிஇஓவாக இருந்து கவனித்து வருகிறார்.
சினிமா தயாரிப்பாளராக இருந்த காலகட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் படங்களிலும் நடித்தார். அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி நண்பேன்டா பொதுவாக எம்மனசு தங்கம் சைக்கோ மாமன்னன் நெஞ்சுக்கு நீதி மனிதன் இது கதிர்வேலன் காதல் கெத்து கண்ணை நம்பாதே சரவணன் இருக்க பயமேன் கண்ணே கலைமானே நிமிர் என 20க்கும் மேற்பட்ட படங்களில் உதயநிதி நடித்திருக்கிறார்.
இதில் சில படங்களில் உதயநிதி ஸ்டாலின் சந்தானம் காமெடி காம்போ பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்த பிறகு உதயநிதி சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். அவரது அரசியல் பணிகளில் முழுநேர கவனத்தையும் செலுத்தி தமிழகத்தின் துணை முதல்வராக பணிசெய்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த படம் சைக்கோ. இந்த படத்தில் நித்யா மேனன் சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இதில் கண்பார்வையற்றவர் என்ற கேரக்டரில் உதயநிதி மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் இந்த படத்தில் ரசிகர்களை மிரட்டியிருந்தார்.
சைக்கோ படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய உதயநிதி கூறியதாவது, சைக்கோ படத்தில் நிறைய சீன்களில் வர்றது நான் கிடையாது. எல்லாமே டூப் தான். ஏன்னா நான் சூட்டிங் போக முடியலே. ரொம்ப கம்மியான நாள்தான் போனேன். அப்போ பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு போயிட்டேன்.என்னை மாதிரியே இருக்கிற ஒரு பையனை புடிச்சு கொடுத்துட்டேன், அவரை வெச்சு எடுத்துக்கங்கன்னு சொல்லிட்டு நான் கிளம்பிட்டேன்.
அதனால் நான் இல்லாமலேயே 5 நாள் டூப்பை வச்சு படத்தை ஷூட்டிங் பண்ணிட்டாங்க. கிளைமாக்ஸ் மட்டும் நீங்க வரணும்ன்னு சொன்னாங்க. என்னால வர முடியாது. ஹீரோயினை வைத்து முடிங்கன்னு சொல்லிட்டேன். கிளைமாக்ஸ் காட்சிகளில் பார்த்தீர்கள் என்றால் நான் இருக்க மாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





