தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் சூரி. மாமன் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி இப்போது மண்டாடி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடல் மீனவர்கள் பற்றிய கதைக் களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. மண்டாடி படத்தில் கதாநாயகியாக மஹிமா நம்பியார் மற்றும் முக்கிய கேரக்டரில் சத்யராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை இயக்குனர் மதிமாறன் புகழேந்தி டைரக்ட் செய்து வருகிறார். இராமநாதபுரம் தொண்டியில் உள்ள கடற்கரைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மண்டாடி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை பிரபல சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் டைரக்டர் பீட்டர் ஹெய்ன் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பீட்டர் ஹெய்ன் தலைமையில் சூரி பங்கேற்ற விறுவிறுப்பான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் திடீரென குறுக்கிட்ட மழையால் ஒருநாள் படப்பிடிப்பு தடைபட்டது. அதனால் ஒரு நாள் படப்பிடிப்பு மீண்டும் எடுக்க வேண்டி நிர்பந்தம் இருந்தது.
இந்த சூழ்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் பணிசெய்ய ஸ்டண்ட் டைரக்டர் பீட்டர் ஹெய்ன் கமிட் ஆகி இருந்தார். ஆனால் மண்டாடி படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பு பாக்கி இருந்ததால், அவர் ஒருநாள் கழித்து அந்த தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் பீட்டர் ஹெய்ன் அனுமதி கேட்டுள்ளார்.
அதற்கு சம்மதிக்க மறுத்த அந்நிறுவனம், அவர் ஷூட்டிங் வருவதற்கான பிளைட் டிக்கெட்டையும் அவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டது. இதையடுத்து பீட்டர் ஹெய்ன் உடனடியாக படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளார். அதில் மண்டாடி படத்தின் சண்டைக்காட்சிக்காக ஒரு நாள் நான் இருந்தே ஆக வேண்டும். இல்லை என்றால் படக்குழுவுவுக்கு மிகப்பெரிய நஷ்டம், பாதிப்பு ஏற்படும்.
அதனால் ஒரு நாள் மட்டும் எனக்கு கூடுதல் அனுமதி தாருங்கள். இல்லை என்றால் நான் உங்கள் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார். தமிழ் தெலுங்கில் மிகவும் பிஸியான ஒரு ஸ்டண்ட் டைரக்டர் பீட்டர் ஹெய்ன் என்பதால் பதறிப்போன பிரசாந்த் நீல், நீங்கள் ஒரு நாள் இருந்து மண்டாடி படத்தை முடித்துவிட்டு வாருங்கள். நான் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். சூரி படத்திற்காக பீட்டர் ஹெய்ன் செய்த இந்த தரமான சம்பவம் சினிமா வட்டாரத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது.





