தமிழ் சினிமாவில் கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ஜெயம் ரவி காஜல் அகர்வால் கேஎஸ் ரவிக்குமார் யோகிபாபு ராமர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இதில் ஆட்டோ டிரைவராக கிளைமாக்ஸில் கேமியோ ரோலில் வந்தார் பிரதீப் ரங்கநாதன்.
தொடர்ந்து லவ்டுடே படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அவரே நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றார். இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. அடுத்து ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும் வெளியாகி மாஸ் ஹிட் படமாக 150 கோடி ரூபாய்க்கு வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 3 வெற்றிப் படங்களை தந்த நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு டியூட் படமும் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படமும் வணிக ரீதியாக ஒரு வெற்றிப் படமாகவே இருந்தது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படமும் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த கேள்வி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எல்ஐகே படத்துக்கு பின் அவர் எந்த படத்தில் நடிக்கிறார் என்ற சந்தேகம் நீடிக்கிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார்.
இந்த தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி விட்டது. இந்நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தை பிரதீப் ரங்கநாதன் டைரக்ட் செய்கிறார். மேலும் அவரே அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார். இதுகுறித்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுதிபடுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது, பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தை நாங்கள் ஏஜிஎஸ் சார்பில் தயாரிக்க உள்ளோம். 2026ம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கிவிடும். இதே ஆண்டுக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் திரைக்கதையில் பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார்.





