தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகருக்கு கொல்கத்தாவில் நடந்த விழாவில் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. கூரன் என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதை எஸ்ஏ சந்திரசேகர் பெற்றுள்ளார்.
இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கடந்த 1980ம் ஆண்டுகளில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவரது பெரும்பாலான படங்கள் புரட்சிக்கரமான சமுதாய கருத்துகளை கொண்டதாக இருக்கும். அதனால் இவர் புரட்சி இயக்குனர் என்று அப்போது ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். இப்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, நான் சினிமாவில் 45 ஆண்டுகளாக தயாரிப்பாளர் இயக்குனர் என செயல்பட்டு வருகிறேன். இப்போது நடிகராகவும் இருக்கிறேன். சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்றைப் போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் நடித்த படங்களில் கூரன் என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது ஒரு நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள பாசம் சம்பந்தப்பட்ட கதை. கூரன் படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது.
பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பீப்பில் பார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். சினிமாவில் அன்பைப் பற்றி சொல்லப்படுவதற்காக சினிகைன்ட் என்கிற அந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற்றுக் கொள்ளும்படி எனக்கு சமீபத்தில் அழைப்பு வந்தது.
கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு இந்த விருதை வழங்கினார்கள். நான் என் மனைவியோடு வந்து மகிழ்ச்சியோடு அந்த விழாவில் கலந்துகொண்டு விருதை பெற்றுக் கொண்டேன். சினிமாவில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் உழைப்பை வழங்கினால் அது நமக்கு பெருமையையும் அங்கீகாரத்தையும் தேடித் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று எஸ் ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்.





