விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் மாவட்ட கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது, மேடையில் பேசுபவர்களின் பேச்சை கேட்டால் தான் நீங்கள் நாளை மேடையில் பேச முடியும். அமைதியாக இருந்து பேசுவதை கவனியுங்கள்.
நமது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும் இளம் தலைமுறையினரை கட்டமைப்பது கல்வி வேலை வாய்ப்பு சமூகப் பார்வை அரசியல் இலக்கியம் ஆகிய விஷயங்கள் குறித்து பேசுவதற்காக தான் கூடுகிறோம். சும்மா துதி பாடுவதற்கோ கத்தி கூப்பாடு போடுவதற்கோ கூடவில்லை. அப்படி கூடுவதாக இருந்தால் என்னை அழைக்காதீர்கள்.
எல்லா இடத்திலும் இதைத்தான் செய்கின்றனர். அமைதிதான் நம்மை வலுப்படுத்தும் சென்னையில் நடக்கும் மார்கழி மக்கள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதது எனக்கு வருத்தமாக உள்ளது. எந்த நொடியிலும் உங்களை விட்டு விலகாமல் இருக்க முடியும். அம்பேத்கர் மார்க்ஸ் பெரியார் ஆகிய மூன்று பேரின் கொள்கைதான் என் கொள்கைகள். அதுதான் என்னுடைய இலக்கு.
மானுடத்தை தான் நான் பேசுவேன். நான் சாதிக்கு எதிரான ஒருவன் தான். நான் சாகும்வரை ஜாதி ஒழியுமா என்று எனக்கு தெரியாது. நான் அறத்தின் பக்கம் தான் நிற்பேன். ஒருக்காலும் ஜாதியின் பின்னால் நிற்க மாட்டேன். ஒருவேளை நான் அரசியலுக்கு வந்து நான் அதில் ஈடுபட்டால் ஏதேனும் ஒரு அமைப்பை தொடங்கினால் அப்போதும் கூட சாதி சமூகத்திற்கு எதிராக தான் செயல்படுவேன்.
அப்போது எனது சமூகத்தை காட்ட வேண்டிய கடமை இருந்தாலும் கூட மானுட சமூகத்தின் மீது பேரன்பை நிலை நாட்டுவதுதான் முக்கியம். அதற்காக வாழ்க்கை முழுவதும் நான் போராடுவேன். என்னை சாதி பெயரில் எடுத்துக் கொள்ளாதீர்கள். கிட்டத்தட்ட 15, 20 ஆண்டு கால தவ வாழ்க்கை வாழ்ந்துள்ளேன். என்னை நேசிப்பவராக இருந்தால் என்னுடைய அரசியலை புரிந்து கொண்டு அதனை செயல்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை.
எனது அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு நமது சமூகத்தை சேர்ந்தவன் என்று சொன்னால் அதில் எனக்கு முழு உடன்பாடு கிடையாது. நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எனது சினிமா உங்களுக்கு போதையை கொடுக்காது. கத்துவதால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்று மாரி செல்வராஜ் அந்த விழாவில் கோபமாக பேசினார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





