நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1952ம் ஆண்டில் வெளியான படம் பராசக்தி. இப்போது அதே டைட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற 10ம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தின் விளம்பரத்தில் நடிகர் திலகத்தின் வாரிசாக சிவகார்த்திகேயன் சித்திரிக்கப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ் திரை உலக வரலாற்றை 1952ம் ஆண்டில் புரட்டிப் போட்ட பராசக்தி திரைப்படத்தின் பெயரை, மீண்டும் அதே பெயரில் படம் தயாரிப்பதற்கு ஆரம்பத்திலேயே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தோம்.
ஆனால் ரசிகர்களின் வேண்டுகோள் மற்றும் எதிர்ப்பை புறந்தள்ளி மீண்டும் அதே பெயரில் பராசக்தி என திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவர உள்ளது. வேதனையில் இருக்கும் எங்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்வது போல நேற்று ஒரு டிவி சேனலில் தீ பரவட்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடம் இருந்து தீப்பந்தத்தை சிவகார்த்திகேயன் பெறுவது போல பராசக்தி படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நடிகர் திலகத்தின் வாரிசுகளாக பிரபு, மூன்றாம் தலைமுறை விக்ரம் பிரபு ஆகியோர் இன்றளவிலும் தமிழ் சினிமாவின் தடம்பதித்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயனை நடிகர் திலகத்தின் வாரிசு என்கிற ரீதியில் விளம்பரப்படுத்திக் கொள்ள யார் அதிகாரம் அனுமதி கொடுத்தது?
நேர்மையை காற்றில் பறக்கவிட்டு அடுத்தவர் உழைப்பில் அடுத்தவர் பெயரில் குளிர் காய்ந்து எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்று திரையுலகில் திரியும் கூட்டத்தில் ஒருவராக இன்று சிவகார்த்திகேயனும் மனசாட்சி தேவையில்லை பணம் மட்டும் போதும் என்ற நிலையில் பராசக்தி திரைக்குழுவும் உள்ளது.கருணாநிதியின் புரட்சிகர வசனங்களை தனது உணர்ச்சிகர நடிப்பால் தமிழினத்திடம் கொண்டு சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ் திரையுலகம் கலையின் கொடையாக உலகிற்கு தந்த திரைப்படம் தான் பராசக்தி.
அந்த படத்தின் பெயரை அபகரித்ததோடு மட்டுமின்றி நடிகர் திலகத்தின் பெயரையும் புகைப்படத்தையும் தங்களுடைய வணிக நோக்கத்திற்காக, சுய லாபத்திற்காக பயன்படுத்துவதை நடிகர் திலகத்தின் ஆன்மா மன்னிக்காது என்று அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கோலிவுட் வட்டாரத்திலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





