நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இப்போது சென்சார் சிக்கலில் வசமாக மாட்டியுள்ள நிலையில் இந்தப்படம் வருகிற 9ம் தேதி ரிலீஸ் ஆகுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. நடிகர் விஜய் தவெக என்கிற அரசியல் இயக்கம் தொடங்கி தமிழ்நாடு அரசியல் களத்தில் முழு வீச்சில் இருந்து வருகிறார்.
அது மட்டும் இன்றி ஜனநாயகன் தான் என்னுடைய கடைசி படம் என்றும் ஏற்கனவே அவர் அறிவித்துவிட்டார். இந்த படத்தை சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 வலிமை துணிவு போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எச் வினோத் இயக்கியுள்ளார். அதனால் ஜனநாயகன் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்து வருகிறது.
இப்போது விஜய் தீவிர அரசியலில் இருப்பதால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் பலவிதமான சிக்கல்களை சந்திக்கும் என்று ஏற்கனவே தகவல் பரவி வந்தது. அந்த வகையில் ஜனவரி 9ம் தேதி ரிலீசாக இருந்த ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் வெளியாகிறது.
இந்த சூழலில் இப்போது ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. சென்சாருக்கு படத்தை அனுப்பி 10 நாட்களுக்கு மேலாகியும் சென்சார் போர்டு தரப்பில் சான்றிதழ் தராத நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த படக்குழுவினர் நீதிமன்றத்திற்கு சென்று விட்டனர்.
நேற்றும் இன்றும் 2 முறை இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் நாளை இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதில் இந்த படம் 9ம் தேதி ரிலீஸ் ஆகுமா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் அதிக பரபரப்புடன் காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலை இங்கு மட்டுமல்ல சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிலும் இதே போல ஜனநாயகன் படத்திற்கு சென்சார் மூலம் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜனநாயகன் படத்தின் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்குமாறும் சில காட்சிகளில் வசனங்களை மியூட் பண்ண சொல்லியும் சென்சார் போர்டு வலியுறுத்தி உள்ளது.
அந்த காட்சிகளை சென்சார் அறிவுறுத்தியபடி சரி செய்து கொடுத்தால் தான் ஜனநாயகன் படம் அரேபிய நாடுகளில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என்று தெரிகிறது. அரபு நாடுகளில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ஓவர்சீஸ் வசூலில் பெரிய அளவில் அரபு நாடுகளில் கணிசமான வருமானம் இருக்கும் என்பதால் பட குழுவினர் சென்சார் சிக்கலை சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.





