நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வந்த ஆரம்பத்தில் அவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர்தான் கே பாக்யராஜ். இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் ரஜினிகாந்த் பரட்டையன் என்கிற கேரக்டரில் வில்லனாக நடித்திருப்பார். அவருக்கு இது எப்படி இருக்கு என்ற வசனத்தை அப்படி பேச சொல்லிக் கொடுத்ததே அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த கே பாக்யராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த நான் சிவப்பு மனிதன் படத்தில் சிஐடி போலீஸ் அதிகாரியாக சின்ன சேலம் சிங்காரம் என்ற கேரக்டரில் கே பாக்யராஜ் நடித்திருப்பார். அதே போல் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியும் கே பாக்யராஜூம் ராஜா மந்திரியாக ஒரு டிராமா காட்சியில் நடித்திருப்பார்கள். இதுவரை ரஜினி கே பாக்யராஜ் இடையே நல்ல நட்பும் இணக்கமும் இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் கே பாக்யராஜூக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேறற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, கடந்த 1970களில் 3 ராஜாக்கள் தமிழ் சினிமாவுக்குள் வந்தார்கள். அதில் ஒருவர் இளையராஜா. இன்னொருவர் பாரதிராஜா. மற்றொருவர் பாக்யராஜா. இந்த 3 ராஜாக்களும் தனித்தனி துறைகளில் கொடி கட்டி பறந்தார்கள். இன்னும் அவர்களது கொடி பறக்கிறது.
திரைக்கதை தான் சினிமாவுக்கு முதுகெலும்பு. அந்த முதுகெலும்பு தான் நம்ம பாக்யராஜ். இந்தியாவில் திரைக்கதை மன்னர்கள் என்றால் சலீம் ஜாவித் தான். அவர்களுக்கு அடுத்து இணையாக பாக்யராஜை சொல்லலாம். பாக்யராஜின் படங்கள் எல்லாம் பெண்களை மையப்படுத்தி இருக்கும். அவரது ஒவ்வொரு படமும் புரட்சிகரமாக இருக்கும். குறிப்பாக முந்தானை முடிச்சு படத்தில் இண்டர்வெல் சீனில் குழந்தையை தாண்டும் காட்சி திரைக்கதையாக பிரமிக்க வைத்தது.
என்னை பொறுத்தவரை பாக்யராஜூக்கு கிடைக்க வேண்டிய மதிப்பு மரியாதை ஊதியமெல்லாம் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை. இவர் இந்தியில் இருந்திருந்தால் சலீம் ஜாவீத் இவரை தோளில் தூக்கி பாராட்டி இருப்பர். தனது திரையுலக வாரிசு என எம்ஜிஆர் பாக்யராஜை சொன்னார். அவர் பணியாற்றுவதை பார்த்தால் ஆண்களுக்கே அவர் மீது காதல் வரும். படையப்பா கதை பற்றி பாக்யராஜிடம் பேசியபோது அந்த நீலாம்பரி கேரக்டரில் மட்டும் யாரை போடுகிறீர்களோ தெரியாது. அது ஹிட் ஆகி விட்டால் படம் எங்கேயோ போய்விடும் என்றார்.
அதேபோல பாபா படத்தின் போது அவரிடம் பேசினேன். சார் நீங்க ஆன்மீகம் பாலோ பண்றீங்க. ஓகே அதற்காக எல்லோரும் பாலோ செய்வது அவசியம் இல்லை. இது கமர்சியலா எப்படி போகுமோ தெரியாது. கொஞ்சம் ரிஸ்க் தான். இதில் இன்னும் சில விஷயங்களை நீங்கள் சேர்க்க வேண்டும் என்று சொன்னார். அவர் ஜோசியர் மாதிரி சொன்னது அப்படியே நடந்தது என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





