நடிகர் விஜய் இன்று பனையூரில் உள்ள அவரது தவெக கட்சியின் தலைமை நிலைய செயலகத்தில் நடந்த விழாவில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். அங்கு வளாகத்தில் இருந்த 40 அடிகொடி மரத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார். முன்னதாக கொடி மரத்தின் கீழ் இருந்த பெயர் கல்வெட்டை திறந்து வைத்தார்.
அதன்பிறகு, தவெக தலைவர் விஜய், விழாவில் திரண்டிருந்த கட்சியினர் மத்தியில் நெஞ்சில் கைவைத்து உறுதிமொழி வாசித்தார். கட்சியினரும் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து கட்சிப் பாடல் வெளியிடப்பட்டு, அங்கிருந்த திரையில் டிஸ்பிளே செய்யப்பட்டது. தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற அந்த பாடல் விஷூவலாக ஒளிபரப்பானது.
இந்த விழாவில் நடிகர் விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். முன்னதாக கடவுள் வாழ்த்துடன் விழா துவங்கியது. தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் வரவேற்றார். இந்த விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
விஜய் அறிமுகப்படுத்திய கட்சிக் கொடியின் நடுவில் வாகை மலர், அதை சுற்றிலும் நட்சத்திரங்கள், அதன் இருபுறங்களிலும் முன்னங்காலை தூக்கிய நிலையில் போர் யானைகள் என அடர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் கொடி வடிவமைக்கப்டட்டு இருந்தது. கட்சிக்கொடி குறித்து வரலாற்று பின்னணியை பின்னர் நானே தெரிவிக்கிறேன் என்று விழாவில் பேசிய நடிகர் விஜய் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், எல்லோருக்கும் வணக்கம். இந்த நாள் நம் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தை துவங்கி, அதற்கு தொடக்கப் புள்ளியாக பிப்ரவரி மாதம் கட்சியின் பெயரை அறிவித்தேன்.
அப்போது முதல் நீங்கள் எல்லோரும், குறிப்பிட்ட அந்த நாளுக்காக காத்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது. நம் முதல் அரசியல் மாநாடு அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது. விரைவில் அதற்கான நேரம், நாள், இடத்தை நான் அறிவிப்பேன். அதற்கு முன்பாக நமது கட்சியின் கொடியை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறேன், என்று பேசினார்.





