எப்போதுமே நடந்த சம்பவங்களை உண்மை கதைகளை படமாக்கும்போது அதன் உண்மை நிகழ்வுகளை திரையில் கொண்டு வரும்போதுதான் அந்த படைப்பு ரசிகர்களின் மனதில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த கதைக்களத்தில் நின்று நடந்த சம்பவங்களை மனம் அதிர பார்த்த ஒரு உணர்வு ஏற்படும். அது அந்த படைப்புக்கு பெரிய வெற்றியை கொடுக்கும்.
அதுபோன்ற ஒரு படம்தான் நாளை பராசக்தியாக திரைக்கு வர இருக்கிறது. கடந்த 1960 – 65 காலகட்டத்தில் மதராஸ் மாகாணமாக இருந்த போது நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை மையப்படுத்தி தான் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நடந்த அதிரடி சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதைக்களமாக திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்சார் போர்டுவிடம் தணிக்கை சான்றிதழ் பெற அனுப்பப்பட்ட இந்த படம் பல இடங்களில் தணிக்கை என்ற பெயரில் குதறப்பட்டதாக ஒரு புகார் எழுந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
பராசக்தி படத்தில் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சென்சார் அதிகாரிகள் பராசக்தி படத்தில் பல இடங்களில் கட் செய்ய சொல்லி இருக்கிறார்கள். நிறைய வார்த்தைகளுக்கு மியூட் போட சொல்லி இருக்கிறார்கள். அதன்படி படத்தில் மொத்தம் 25 இடங்களில் கட் மட்டும் மியூட் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி தீ பரவட்டும் என்ற முக்கிய வார்த்தை மீயூட் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மொழி திணிப்பு தொடர்பான வாய்ஸ் ஓவரில் திருத்தம் சொன்ன சென்சார் குழு, இந்தி எனது கனவை அழித்தது என்ற வசனத்திற்கு பதிலாக என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது என மாற்றுமாறு கூறியிருக்கின்றனர். மேலும் இந்தி அரக்கி வார்த்தையையும் மாற்றுமாறு சொன்ன அதிகாரிகள், எங்களை நீக்கிவிட்டு என்று ஆரம்பிக்கும் வசனத்தில் இருந்து எந்த நாட்டை ஆளுகிறான் எனப் பொருள் என்பது வரை மொத்தமாக டெலிட் செய்ய சொல்லி இருக்கிறார்கள்.
முக்கியமாக தீ பரவட்டும் என்ற வார்த்தை தான் பராசக்தி படத்தின் ஆணிவேராக இருந்தது. அந்த வார்த்தைக்கும் அதிகாரிகள் மீயூட் சொல்ல சொன்னது ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக மொத்தம் சிவகார்த்திகேயன் படத்தை சென்சார் அதிகாரிகள் கொத்து பரோட்டா போல போட்டு குதறி எடுத்து விட்டார்கள் என்று ரசிகர்கள் வருத்தமாக கமெண்ட் செய்துள்ளனர்.





