இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பார்த்திபன். கே பாக்யராஜ் இயக்கத்தில் உருவான தாவணி கனவுகள் என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பார்த்திபன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து நடிகர் பார்த்திபன் புதிய பாதை படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
புதிய பாதை படத்தில் நடித்த போது படத்தின் நாயகி சீதாவுக்கும் நடிகர் பார்த்திபனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1990ம் ஆண்டில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு அபிநயா கீர்த்தனா என்ற 2 மகள்களும் ராதாகிருஷ்ணன் என்கிற வளர்ப்பு மகனும் உள்ளனர்.
ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த 2001ம் ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நடிகர் பார்த்திபன் நடிகை சீதா இருவரும் பிரிந்து விட்டனர். 2004ம் ஆண்டில் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று மண வாழ்க்கையில் இருந்து மொத்தமாக பிரிந்து விட்டனர். அதன்பிறகு நடிகை சீதா திரைப்படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடிக்க வந்து விட்டார்.
நடிகர் பார்த்திபன் சீதாவை பிரிந்த பிறகு மீண்டும் 2வது திருமணம் செய்து கொள்ளவில்லை. முரட்டு சிங்கிளாகவே 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் நடிகர் பார்த்திபனின் 2 மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்து விட்டது. தற்போது தனது மகன் ராதாகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைக்கும் வேலைகளில் பார்த்திபன் ஆர்வம் காட்டி வருகிறார்.
தனது மகனுக்கு பெண் தேடும் விஷயத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு நேர்காணல் பேசிய நடிகர் பார்த்திபன் தனது மகன் திருமணம் முடிந்ததும் தானும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிய விஷயம் இணையத்தில் வைரலானது. இதற்கு நடிகர் பார்த்திபன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து நடிகர் பார்த்திபன் கூறியதாவது, திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை தான். மனைவி என்கிற ஸ்தானமும் ஒருவருக்கு தான்.
அதில் நான் எப்போதும் தீர்மானமாக இருக்கிறேன். மனமாற்றம் ஏற்படுகிற அளவுக்கு புதிதாக ஒன்றும் வாழ்க்கையில் நிகழவில்லை. என்னுடைய 2 பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனக்கும் என் பையனுக்கும் தான் இன்னும் ஆகலே என்று காமெடியாக ஜாலியாக நான் சொன்ன விஷயம் அது. நிஜ வாழ்க்கையில் அப்படி சொல்லவில்லை. இந்த தகவல் வெறும் ரசிப்பிற்காக மட்டுமே என்று நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார்.





