தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்களில் முதன்மை நட்சத்திர கவிஞராக ஜொலிப்பவர் கவிஞர் வைரமுத்து. கவிப்பேரரசு என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் சிறந்த பாடல்களை எழுதியதற்காக இதுவரை 6 முறை தேசிய விருது பெற்ற மாபெரும் கவிஞர். பல ஆயிரக்கணக்கான வெற்றி பாடல்களுக்கு சொந்தக்காரர்.
திரைப்பட பாடல் ஆசிரியராக மட்டுமின்றி கவிஞராக அவர் எழுதிய கவிதைகள் ஏராளம். அவர் எழுதிய நூல்களும் ஏராளம். சமீபத்தில் அவர் திருவள்ளுவர் எழுதிய 1330 திருக்குறளுக்கு பொருள் எழுதியிருந்தார். அந்த நூலின் பெயர் வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற தலைப்பில் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது.
கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் மூன்றாம் உலகப்போர் தண்ணீர் தேசம் திருத்தி எழுதிய தீர்ப்புகள் வைகறை மேகங்கள் வில்லோடு வா நிலவே உள்ளிட்ட பல நூல்கள் அவரது சிறந்த படைப்புகளாக வாசகர்களால் கொண்டாடப்படுகின்றன. வைரமுத்து திமுக கட்சி சார்ந்த ஆதரவாளராக இருப்பதால் கடும் விமர்சனங்களை சந்திக்கிறார்.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகி சின்மயி இவர் மீது சொன்ன சில பாலியல் புகார்களும் வைரமுத்து குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ஒரு இலக்கிய படைப்பாளியாக கவிஞராக வைரமுத்து ஒரு கொண்டாடப்பட வேண்டிய ஒரு சிறந்த மனிதராக தான் இருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையை தவிர்த்துவிட்டு பார்த்தால் அவர் ஒரு அற்புதமான கலைஞர் கவிஞர்தான்,
கவிஞர் வைரமுத்து அவ்வப்போது சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளில், விழாக்களில் கலந்துக்கொள்வார். குறிப்பாக பள்ளிகள் கல்லூரிகள் பொது அமைப்புகள் இலக்கிய அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆவலாக கலந்துக்கொண்டு உரையாற்றுவார். இது பல ஆண்டுகளாக அவரது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இன்று திருப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கவிஞர் வைரமுத்துவுக்கு திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு அவரது ஆதரவாளர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் வைரமுத்து நின்றிருந்த பகுதியை நோக்கி தனது செருப்பை வீசி எறிந்தார். அது அங்கிருந்த மற்றொருவரின் தலை மீது விழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் பெயர் ஜெயா என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.





