கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர்கள் மூலமாக வரும் கணிசமான வருமானமே அவர்களது லாபத்தை தீர்மானிப்பதாக இருந்தது. இதுதவிர ஆடியோ மற்றும் சாட்டிலைட் சானல்களின் உரிமங்கள் மூலமாகவும் ஒரு கணிசமான தொகை தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தது.
ஆனால் ஓடிடி தளங்கள் உருவான பிறகு சினிமா தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுப்பதே டிஜிட்டல் உரிமம்தான். ஏறக்குறைய படத்தின் தயாரிப்பில் 60 முதல் 70 சதவீதம் வரை அவர்களுக்கு படத்தின் பட்ஜெட் தொகை கிடைத்து விடுகிறது. அதனால் டிஜிட்டல் உரிமத்தை மனதில் வைத்துதான் படத்தின் தயாரிப்பாளர்கள் பட்ஜெட்டையே தீர்மானிக்கிறார்கள்.
இத்தகைய ஒரு சூழல் காரணமாக திரைப்படங்கள் ரிலீஸ் தேதி முடிவு செய்யும் பவர் இப்போது ஓடிடி நிறுவனங்கள் கைக்கு போய்விட்டது. வரிசையாக படங்களை வாங்கும் ஓடிடி நிறுவனங்கள் அவர்களது வசதிப்படி படங்களை ரிலீஸ் செய்ய தேதியை ஒதுக்கி தருகின்றனர். அத்துடன் ஓடிடி வாங்காத சில படங்கள் திரைக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன.
இந்நிலையில் நடிகர் ரவிமோகன் நடித்த படம் கராத்தே பாபு. இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளது. ஆனால் அதற்கு கால்ஷீட் தராமல் நடிகர் ரவிமோகன் இழுத்தடித்து வருகிறார்.
அதனால் கராத்தே பாபு படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 32 கோடி கொடுத்து வாங்கிய ஜீ 5 ஓடிடி நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தேதியில் இந்த படத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுக்கவில்லை. ஏனென்றால் இன்னும் படமே திரைக்கு வரவில்லை. இதனால் பார்த்து பார்த்து பொறுமை இழந்த ஜீ ஒடிடி நிறுவனம் கராத்தே பாபு படத்தை வாங்க மாட்டோம் என்று மறுத்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து படத்தை திருப்பி கொடுத்து விட்டது.
இதனால் கராத்தே பாபு படத்தின் தயாரிப்பாளருக்கு ஓடிடி உரிமம் விற்ற வகையில் ரூ. 32 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்படி சில ஹீரோக்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால் படத் தயாரிப்பாளர்கள் பலத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பிட்ட தேதியில் கராத்தே பாபு திரைக்கு வந்திருந்தால் இந்த நஷ்டம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்காது என்பதும் கவனிக்கத்தக்கது.





