இயக்குனர் பாலா இயக்கிய முதல் படம் சேது. கடந்த 1999ம் ஆண்டில் சேது படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த பிறகு தான் நடிகர் விக்ரம் சியான் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இந்த படம்தான் நடிகர் விக்ரமை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாற்றியது. விக்ரமுடன் சிவக்குமார் பாரதி அபிதா ஸ்ரீமன் ராஜஸ்ரீ உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
கல்லூரி மாணவர் விக்ரம் அடாவடியான ரவுடித்தனம் பண்ணும் ஒரு இளைஞர். அவரது அண்ணன் சிவக்குமார் ஒரு நீதிபதி. நண்பர்களுடன் இருக்கும் விக்ரம், கல்லூரியில் படிக்கும் மாணவி அபிதாவை காதலிப்பார். பிராமண பெண்ணான அவர் காதலை ஏற்க மறுப்பார்.
ஒரு கட்டத்தில் போராடி தனது காதலை விக்ரம் அவருக்கு புரிய வைப்பார். அந்த நேரத்தில் ஒரு சண்டை நடக்கும். அதில் தலையில் அடிபட்டு விக்ரம் மனநிலை தவறி விடுகிறார். பிறகு அவர் மன பாதிப்பில் இருந்து மீண்டு வந்தராா, தனது காதலியை மணந்தாரா என்பதுதான் சேது படத்தின் கதைக்களமாக இருந்தது.
சேது படத்துக்கு பிறகு இயக்குனர் பாலா நந்தா நான் கடவுள் பிதாமகன் பரதேசி அவன் இவன் தாரை தப்பட்டை ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படம் வெளியானது. இந்த படத்தில் முதலில் சூர்யா நடித்தார். பிறகு அவருக்கு பதிலாக அருண் விஜய் இந்த படத்தில் வாய்பேசாத ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பாலா சேது படம் குறித்து கூறியதாவது, சேது படம் ரிலீஸ் ஆகி நல்லா ஓடிட்டு இருந்தது. அப்போது செல்போன் இல்லாத காலம். அந்த படத்தை பார்த்த வயசான ஒரு அம்மா என்னோட வீட்டு லேண்ட் லைன் போனுக்கு கால் பண்ணி இருந்தாங்க.அவங்களுக்கு பிள்ளைங்க யாரும் இல்ல, வாரிசுன்னு யாருமே இல்ல. ஆனா சொத்து இருக்கும் போல தெரியுது.
அந்தம்மா என்கிட்ட பேசும்போது, உனக்கு நான் ஏதாவது பண்ணனும் போல தோணுது. என்கிட்ட நிலம் கொஞ்சம் இருக்குது. அதை நான் உனக்கு எழுதி தரட்டுமா என்று அந்தம்மா போனில் கேட்டாங்க. அதாவது எனக்கு இலவசமா தர்றதா சொன்னாங்க. அதெல்லாம் எனக்கு வேண்டாம் அம்மா. அதை ஏதாவது அனாதை ஆசிரமம் முதியோர் இல்லத்துக்கு எழுதி கொடுத்துடுங்கன்னு நான் சொல்லிட்டேன் என்று இயக்குனர் பாலா கூறியிருக்கிறார்.





