சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன், குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்திருந்தால் நல்லது என்று நடிகை திரிஷா குறித்து விளையாட்டாக கூறியிருந்தார். இதை பலரும் விமர்சித்ததால் இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்த நிலையில் நடிகை திரிஷா தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து நடிகர் பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகர் பார்த்திபன் கூறியிருப்பதாவது, தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தி ஆகணும். அந்த மாதிரிதான் நான் வருத்தம் தெரிவித்தேன். மன்னிப்பும் கேட்டேன். அந்த நிகழ்ச்சியில் தவறு நடந்ததாக உணர்கிறேன். உண்மையில் அது தவறி தான் நடந்தது.
நான் விஜய் அஜித் பற்றி பேசுகையில் ஒரு போட்டோ வந்தது. அதை பார்த்ததும் என்ன பேசுவது என தெரியாமல் திகைத்து விட்டேன். நான் திட்டமிட்டு அவரை பற்றி பேச வேண்டும் என்று சொல்வது 100 சதவீதம் பொய். நான் அப்படி இல்லை. நான் காசு வாங்கிக் கொண்டு எந்த நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை. அதை நான் செய்யப் போவதுமில்லை. காசு வாங்கிக்கொண்டு எந்த கட்சியிலும் சேரப் போவதுமில்லை. காசுக்காக நான் எந்த தவறையும் செய்யப் போவதில்லை.
திரிஷா வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும் என பலரும் சொன்னார்கள். அரசியல் என்பது சாதாரண விஷயம் இல்லை. விஜய் பல தடைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறார். கரூர் சம்பவத்தில் கூட விஜய்க்கு விமர்சனங்கள் வந்தன. இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இவ்வளவு பாதிப்புக்கும் காரணமான பெண்மணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பது என் அடி மனதில் இருந்தது. ஆனால் அதை சொல்வதற்காக அந்த மேடைக்கு நான் செல்லவில்லை. இவர்களை பற்றி பேசுவதும் என் லட்சியம் இல்லை.
நான் பிரச்னையை எப்போதும் விரும்பாதவன். அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னேன். ஆனால் வேறு வழியில் ரிலீஸ் ஆகிவிட்டது. நான் ஒரு 3வது மனுஷியை பற்றி தான் பேசினேன். இந்த பிரச்சனையில் 3 பேரில் முதலில் எனது அன்பு நண்பர் விஜய். அவரின் வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்படுகிறேன். 2வது இடத்தில் அவருடைய மனைவி. அவர்தான் மனைவி முக்கியமான ஸ்தானத்தில் இருக்கிறார். இந்த 3வது மனுஷி வீட்டில் இருந்து இருக்கலாம் என்று சொன்னேன்.ஆனால் இதை பெண்களுக்கு பேசி எதிராக நான் பேசியதாக கூறுகிறார்கள்.
அது எனக்கு கஷ்டமாகி விட்டது. நான் ரொம்ப சின்சியராக தான் வருத்தம் தெரிவித்திருந்தேன். இப்படி ஒரு டிவீட் வரும் என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன். 3வது மனுஷியின் 3ம் தரமான டிவீட்டால் தான் இதை பேசுகிறேன். அவரைப் பற்றி பொதுவெளியில் எக்கச்சக்கமான விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவில்லை. எனக்கு மட்டும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இந்த விஷயத்தில் என்னுடன் நிற்பவர்களுக்கு நன்றி. நீங்கள் நன்மைக்கு பக்கத்தில் இருக்கவில்லை உண்மைக்கு பக்கத்தில் இருக்கிறீர்கள் என்று நடிகர் பார்த்திபன் வீடியோவில் கூறியிருக்கிறார்.





