முதல் வீடியோவில் 3வது மனுஷியின் 3ம் தர டிவீட் என விமர்சனம் செய்த நடிகர் பார்த்திபன் இப்போது வெளியிட்டுள்ள 2வது வீடியோவில் கூறியிருப்பதாவது, சினிமாவில் உயரத்தில் இருப்பவர் அதை உதறிவிட்டு அரசியலுக்கு வருவதால் இருகரம் கொடுத்து அவரை வரவேற்க வேண்டும் என்று விஜய் குறித்து நான் பேசியிருந்தேன். அதற்காக நான் அந்த கட்சியில் சேர்ந்ததாக கூட சொன்னார்கள்.
அவரது முதல் மாநாட்டில் விஜய் பேசியதை பெருமையாக கண்ணீர் விட்டு பார்த்தேன். அவரைப் பற்றி பேசியதற்காக தவெகவில் பதவிக்காக பேசியதாக சொன்னார்கள். அதற்காக நான் விஜயிடம் பதவி எதுவும் கேட்டதும் இல்லை. இனிமேல் கேட்கப் போவதுமில்லை. இந்த பிரச்னைகள் எல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை என விஜய் சொன்னது போல் நான் பேசிக் கொண்டிருப்பதும் என்னைப் பற்றி வந்த டிவீட்டும் அவ்வளவு வொர்த் இல்லை.
திமுக அதிமுகவுக்கு மாற்றாக விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் இங்கு வந்து சேர்ந்தபோது எனக்கு அதிர்ச்சி. அதே போல் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு தவெக வின் சின்ன பாதிப்பை சரி செய்ய பாஜகவில் என்டிஏ கூட்டணியுடன் சேர்வார் என்ற செய்திகளும் வருகிறது. அதிமுக திமுகவுக்கு மாற்றாக விஜய் வருவார் என்றும் பாஜகவை கொள்கை எதிரி என்று சொன்னது எல்லாமே மாறிவிடுமா என்றும் அதிர்ச்சி.
அரசியலில் எல்லோரும் இப்படித்தான் மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுமா கூட்டணியே வேண்டாம் என்கிற சீமானும் இங்கே இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கொள்கைகள். எது எப்படியோ மக்கள் தான் சரியான தீர்ப்பை கொடுப்பார்கள். மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் அவர்களின் அலையன்ஸ் ரிலையன்ஸ் உடனானது போன்றது. ஆனால் இங்கு யார் ஆட்சி செய்தாலும் தமிழுக்கு சிறு சிராய்ப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பது மட்டுமே என் தனிப்பட்ட கவனம்.
எல்லா பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வருவது போல் என் பேச்சும் முடிவுக்கு வரணும். என் பேச்சுக்கு மட்டும் பதில் சொன்னதால்தான் நீண்ட விளக்கம் கொடுக்க வேண்டியதாகி விட்டது. கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தன் உடலை தானமாக கொடுத்தபோது நானும் என் மனைவியும் பல ஆண்டுகளுக்கு முன்பு உடல் தானம் கொடுத்துள்ளோம் என்றேன். நடிகை திரிஷாவும் உடல் தானம் கொடுத்ததாக சொன்னார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வளவு கசப்பான விஷயங்களை மீறி இந்த விஷயத்துக்காக திரிஷாவுக்கு என் வாழ்த்துகள். நான் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் மீண்டும் மன்னிக்கவும். அதில் உள்ள சரியான விஷயங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளவும். ஒரே வீடியோவில் பேசியதை இரண்டாக பதிவிடுகிறேன். எதையும் இரண்டாக்க அல்ல. என் பக்க விளக்கத்தை சொல்வதால் பக்க விளைவுகளும் அநாகரிமாக அரங்கேறும் என்பதை அறிந்தும் சொல்கிறேன். ஆனால் இதுபற்றி இனி நான் பேசப்போவதில்லை. இதோடு விட்டுவிடுவது நம் அனைவருக்குமே நல்லது என்று நடிகர் பார்த்திபன் அதில் கூறியிருக்கிறார்.





