இன்றைய விளம்பர யுகத்தில் எதை வேண்டுமானாலும் விளம்பரப்படுத்தினால் விற்றுவிடலாம் என்கிற மோசமான ஒரு போக்கு தான் இருந்து வருகிறது. அதுவும் பிரபலமான நடிகர்கள் நடிகைகள் விளையாட்டு வீரர்களை அந்த விளம்பர படங்களில் நடிக்க வைத்து மார்க்கெட்டிங் செய்யும் யுக்தியை வணிக நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.
எனினும் விளம்பர படங்களில் நடிக்கும் பல பிரபலங்கள் அதற்கான சம்பளத்தை கணிசமாக பெறுவதில் காட்டும் ஆர்வத்தை அவர்கள் நடிக்கும் விளம்பர படங்களில் காட்டப்படும் பொருட்கள் தரமானதா, பாதுகாப்பானதா உண்மையானதா என்பதில் சிறிதும் கூட அக்கறையோ ஆர்வமோ காட்டுவதில்லை.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்து பிறகு நடிகராக மாறியவர் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரண் கடந்த பல ஆண்டுகளாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இயல்பிலேயே நல்ல பண்பாளர் என பலராலும் பாராட்டப்படுபவர்.
தமிழகத்தில் உள்ள பிரபல வேட்டி நிறுவனம் ஒன்று நடிகர் ராஜ்கிரணிடம் வேட்டி விளம்பரத்தில் நடிக்குமாறு அழைப்பு விடுத்தது. அந்த விளம்பரத்தில் ராஜ்கிரண் நடிக்க மறுத்தார். 25 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பேசிய அந்த வேட்டி உற்பத்தி நிறுவனம், கடைசியில் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் தர முன் வந்தது.
ஆனால் அப்போதும் நடிகர் ராஜ்கிரண் அந்த விளம்பரத்தில் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை. இறுதியில் அந்த நிறுவனம், இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கொடுத்தும் ஏன் இதில் நடிக்க மறுக்கிறீர்கள். அதற்கான காரணத்தை மட்டுமாவது சொல்லுங்கள் என்று ராஜ்கிரணிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த நடிகர் ராஜ்கிரண், வேட்டி என்பது ஏழை விவசாயிகள் உடுத்தும் ஒரு சாதாரண ஆடை. மிஞ்சிப்போனால் அதை அவனால் 100 ரூபாய் விலை கொடுத்து வாங்க முடியும். நீங்கள் எனக்கு கோடிக்கணக்கில் விளம்பரத்தின் நடிக்க சம்பளம் கொடுக்கறீங்க என்றால் அந்த காசையும் அவன்கிட்ட இருந்து தானே வசூல் பண்ணுவீங்க? இந்த விளம்பர செலவையும் அவன் தலையில் தானே கட்டுவீங்க? அதுதான் நடிக்க மாட்டேன் என்று சொல்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





