தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவர்கள் நடித்த படங்களில் அவர்கள் பாடிய பாடல்கள்தான். எம்ஜிரும் சிவாஜி கணேசனும் பாடிய காதல் பாடல்களும் கொள்கை பாடல்களும் தத்துவ பாடல்களும்தான் அவர்களை இன்னும் ரசிகர்களிடம் நெருக்கத்தில் வைத்திருந்தன.
அப்படி எம்ஜிஆர் சிவாஜி கணேசனின் பின்னணி குரலாக ஒலித்தவர்தான் டிஎம் சௌந்தர்ராஜன். அவர் பாடிய அச்சம் என்பது மடமையடா நான் ஆணையிட்டால் எம்ஜிஆரின் அடையாளங்களாக இன்னும் இருக்கின்றன. அதே போல் டிஎம்எஸ் பாடிய ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு போன்ற பாடல்கள்தான் சிவாஜியின் அடையாளங்களாக இன்றும் இருக்கின்றன.
மறைந்த பாடகர் டிஎம்எஸ்சின் பிறந்த நாளான இன்று கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பதிவில் வெளியிட்ட கவிதையில் கூறியிருப்பதாவது, எட்டுத் திசைகளைக் கட்டியாண்ட சக்கரவர்த்தியாய் இரு; நீ மறக்கவே படுவாய். காற்றைக் கட்டிப்போடும் கான காந்தர்வனாய் இரு; மறக்கவே படுவாய்.
ஆனால் மறக்கப்படவேண்டியவன் அல்லன் நீ! புதிய தலைமுறையின் காதுகளுக்கு உன் கெளரவம் சேரவில்லை. ஆனால் என்னைப் போன்ற எழுபது வயதுக்காரர்களுக்கு இசையும் நீயே; தமிழும் நீயே. தங்கத்திலிருந்து தங்க பஸ்பம் செய்வதுபோல் செளராஷ்டிரத்திலிருந்து தமிழ் பஸ்பம் செய்தாய்.
நடிகர்களுக்கு நாக்கு முகவரி தந்தாய். தொட்டில் முதல் கட்டில் வரை உன் குரல் வாழ்வோடு நடந்து வந்தது. ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என் ஐந்து வயதில் கல்வி வளர்த்தது. ‘என்ணிரண்டு பதினாறு வயது’ என் பன்னிரண்டு வயதில் காதல் கிளத்தியது.
‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா’ பதினான்கு வயதில் காமம் கூட்டியது. ‘சட்டி சுட்டதடா’ ஞானம் வார்த்தது. இப்போதும் என் தொலைதூரப் பயணங்களில் பின்னிருக்கையில் நீயிருக்கிறாய்; வாழ்வெல்லாம் வருவாய் உன்னை மறக்க மாட்டேன். புகழ் வணக்கம் செளந்தரராஜ பாகவதரே! இன்று உனது பிறந்தநாள் என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





