- Advertisement -
Homeபொழுதுபோக்குநள்ளிரவில் கடல் தண்ணீரில் எடுத்துக்கொண்ட தீவிர பயிற்சி - உதவியாளர் சொன்ன சீக்ரெட், தன்னம்பிக்கையின் சிகரம்தான்...

நள்ளிரவில் கடல் தண்ணீரில் எடுத்துக்கொண்ட தீவிர பயிற்சி – உதவியாளர் சொன்ன சீக்ரெட், தன்னம்பிக்கையின் சிகரம்தான் நம் புரட்சித் தலைவரோ…?

- Advertisement -

எம்ஜிஆரின் குரலில் ஒலிக்கும் வசனங்கள் இப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்படுபவை. கடந்த 1967ம் ஆண்டுக்கு முன்பு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படங்களில் அவரது குரல் கணீர் என ஒலிக்கும். ஆனால் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிறகு தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அவரது குரல்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர் நடித்த படங்களில் டப்பிங் பேச வைக்கலாம் என்ற யோசனையை எம்ஜிஆர் நிராகரித்து விட்டார்.

தனது படங்களில் சொந்தக் குரலில் பேசி நடிக்கவே அவர் விரும்பினார். அவர் குரல் கம்மிய போதும் அதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக்கொண்டனர். காவல்காரன் படத்தில் எம்ஜிஆர் பேசும் வசனங்கள் 2 3 முறை ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஒரு காட்சி முடிந்ததும் அதற்கான வசனங்களை எம்ஜிஆர் மீண்டும் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படி வசனங்களை எடிட்டிங்கில் காட்சிகளோடு ஒருங்கிணைப்பது கடினம்.

- Advertisement -

அதில் எம்ஜிஆர் தனக்கே உரிய தொழில்நுட்ப சாதுர்யத்தால் பலமுறை பதிவு செய்த வசனங்களில் சரியான வார்த்தைகளை எடுத்து ஒன்று சேர்த்து காட்சிகளோடு ஒருங்கிணைத்து தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக எடிட் செய்து அசத்தினார்.

பாதித்த தனது குரல் வளத்தை மீண்டும் பெற எம்ஜிஆர் விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ஸ்பீச் தெரபிஸ்ட் பேச்சு பயிற்சி நிபுணர்களை வரவழைத்து பயிற்சி எடுத்துக் கொண்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி ராமமூர்த்தி, குடும்ப டாக்டர் பிஆர் சுப்பிரமணியம் ஆலோசனையின்படி நள்ளிரவில் உதவியாளர்களுடன் கடற்கரைக்கு சென்று தண்ணீர் படும்படி அமர்ந்து உரக்கப் பேசி பேசி பயிற்சி எடுத்தார்.

- Advertisement -

நானும் சாமி என்பவரும் எம்ஜிஆருடன் நள்ளிரவில் கடற்கரைக்குச் செல்வோம். அலை வந்து மோதும் இடத்தில் அவர் அமர்ந்துகொள்வார். நாங்கள் அவரை பிடித்துக் கொள்வோம். அவர் உரக்க பேசி பேசி பயிற்சி மேற்கொண்டார் என்று நெகிழ்ச்சியாக எம்ஜிஆரின் மெய்க்காவலர் கேபி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

இப்படி பல மாதங்களாக எடுத்துக் கொண்ட கடும் பயிற்சிகளால்தான் பெரும் அளவில் இழந்த குரல் வளத்தை தனது பேச்சுத் திறனை எம்ஜிஆர் மீண்டும் பெற்றார். தொண்டையில் குண்டு பாய்ந்ததால் பழைய குரலில் பேச முடியாமல் தழுதழுப்பான கட்டையான தொண்டையில் ஒலித்த எம்ஜிஆரின் குரலும் ரசிகர்களுக்கு கம்பீரமாகவே இருந்தது.

- Advertisement -

சற்று முன்