இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வந்த அரசன் படப்பிடிப்பை பெப்ஸி அமைப்பு நிறுத்தியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்காமல் தடைபட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சிலம்பரசனின் அப்பா இயக்குனர் டி ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்? நிறுத்தியது யார்? நிறுத்தச் சொன்னது யார்?
அரசன் படத்திற்காகவோ சிலம்பரசனுக்காகவோ வாதாடுவதற்காக நான் வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் அதற்கு துணையாக நிற்கும் தென்னிந்திய திரைப்படமும் அறம் தவறி நடந்து விடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே நான் வருகிறேன். சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு எதிராக அவர் வழக்கு மன்றத்துக்கு சென்றார்.
அந்த வழக்கில் எங்கள் பக்கம் தீர்ப்பு வந்து வென்றுள்ளோம். நீதிமன்றம் வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து இரண்டாவது படத்துக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் சிலம்பரசனையே போய் சேரும் என்று ஒரு தீர்ப்பையும் வழங்கி இருக்கிறார்கள். அந்த தீர்ப்புக்கான நகலும் எங்கள் கையில் இருக்கிறது.
இப்படிப்பட்ட இந்த தருணத்தில் அந்த பழைய வழக்கை எடுத்து வைத்துக்கொண்டு நம்முடைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் அதற்கு துணையாக பெப்சியும் சேர்ந்துக்கொண்டு இன்றைக்கு அரசன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளருக்காக போராடுவதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பெப்சியும் நிற்கின்ற போது ஒரு திரைப்பட நடிகருக்காக போராடுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கமும் ஏன் நிற்கக்கூடாது? நிற்க வேண்டும்.
அவர்களும் போராட வேண்டும். உரிமையை பெற்றுத்தர வேண்டும். நியாயத்தை நிலை நாட்ட வேண்டும் என்று ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். சட்டசபை தேர்தல் நடக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் நீதிமன்றத்தால் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் சட்டத்தை எங்கள் கையிலே எடுப்போம், நீதிமன்றத்தால் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் சட்டத்தை எங்கள் கையிலே எடுப்போம்.
நாங்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க கூடிய நிலையில் ஒரு படத்தை நிறுத்துவோம் என்று நிறுத்திக் காட்டி இருக்கிறார்களே இது நியாயமா? என்று கேள்வி கேட்கவும் நான் விரும்புகிறேன். இது தொடர்பாக விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் இருக்கிறேன் என்று நடிகர் டி ராஜேந்தர் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





