ஒரு படத்தில் நடிக்க கோடிக்கணக்கில் சில நடிகைகள் சம்பளம் வாங்குகின்றனர். அவரது நடிப்பு திறமையை பாராட்டி மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவிக்கின்றன. முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். எந்த விழாவுக்கு நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவர்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கிறது.
அதே நேரத்தில் சினிமா நடிகைகள் என்றாலே அவர்களை மிக சாதாரணமாகவும் இளக்காரமாகவும் பார்க்கும் ஒரு தரப்பு ரசிகர்கள் கூட்டமும் இருக்கவே செய்கிறது. மிக எளிதாக அவர்களை பற்றி சமூக வலைதளங்களில் இழிவாக விமர்சிக்கின்றனர். அவர்களது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அசிங்கமான கமெண்ட்டுகளை செய்கின்றனர். இதுவும் ஒருபுறம் நடந்து வருகிறது.
பொது நிகழ்ச்சிகள், சினிமா விழாக்கள் மற்றும் படப்பிடிப்பு தளங்களில் சில நேரங்களில் நடிகைகள், ரசிகர்களின் தொல்லைகளுக்கு ஆளாவது உண்டு. கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்களை உரசுவது இடுப்பை பிடித்து கிள்ளுவது உடலின் முக்கிய பாகங்களை தொடுவது போன்ற அநாகரிகமாக செயல்களில் சிலர் ஈடுபடுவது பலமுறை நடந்திருக்கிறது. இதுபோன்ற தகாத சம்பவங்கள் ஜோதிகா சினேகா போன்ற நடிகைகளுக்கு நடந்திருக்கின்றன.
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த மலையாள நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன். தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். குறிப்பாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடித்த அவருக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சைக்கோ படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. அடுத்து விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த தலைவன் தலைவி படம் விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். சைக்கோ மாலினி 22 பாளையங்கோட்டை மெர்சல் 24 ஓ காதல் கண்மணி போன்ற பல படங்களில் இவரது நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை நித்யா மேனன் கூறியதாவது, பலர் ஒரு சாதாரண பெண்ணிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படி நடிகைகளிடம் நடந்து கொள்வதில்லை. நடிகை என்றால் ஈஸியாக தொட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் ஒரு விழாவுக்கு போனால் கூட ரசிகர்கள் கையை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இந்த கேள்வியை சாதாரண ஒரு பெண்ணிடம் கேட்க முடியுமா? ஈஸியாக தொட்டுவிட நாங்கள் என்ன பொம்மையா? என்று நடிகை நித்யா மேனன் அந்த நேர்காணலில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.





