திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிகர் சுந்தர் சி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். அதிமுக பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் அங்கு அவர் களம் கண்டார்.
அவருக்கு எதிராக திமுக வேட்பாளர் பிடிஆர் எனப்படும் பழனிவேல் தியாகராஜன் நிறுத்தப்பட்டார். இருவரும் கடுமையாக பிரசார களத்தில் போட்டியாளர்களாக மோதிக் கொண்டனர். இங்கு சுந்தர் சிக்கு ஆதரவாக குஜ்பு உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். அதே போல் பிடிஆருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் அந்த தொகுதியில் பிரசாரம் செய்தார்.
இந்த சட்டசபை தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலினை காட்டிலும் அதிக தொகுதிகளில் அதிக நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டவர் உதயநிதி ஸ்டாலின்தான். துணை முதல்வரான அவர் பல்வேறு இடங்களில் தினமும் திறந்தவெளி வேனில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதிமுக குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் அதிக இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் மதுரை மத்திய தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இந்த முறை பிரசாரத்தில் ஈடுபடவில்லை. பிடிஆர் மீது ஏற்கனவே திமுகவுக்கு பலமான வருத்தங்கள் உண்டு.
அதே நேரத்தில் அங்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் இயக்குனர் சுந்தர் சி உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். பிஸினஸ் பார்ட்னர். சுந்தர் சி இயக்கும் தயாரிக்கும் படங்களை எல்லாம் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. அவர்களுக்குள் நிறைய பிஸினஸ் டீல் இருக்கிறது.
அதனால் தான் உதயநிதி மதுரை மத்திய தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடாமல் தவிர்த்திருக்கிறார் என்று தெரிகிறது. ஏனெனில் உதயநிதி அங்கு பிரசாரம் செய்தால் அது திமுக வேட்பாளருக்கு சாதகமாக மாறி ஒருவேளை அவர் ஜெயித்து விடலாம். இதனால் அவரது சினிமா நண்பர் சுந்தர் சி தோல்வியடைய கூடும் என்பதால்தான் அங்கு உதயநிதி பிரசாரம் செய்யவில்லை என்று தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்.





