தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்ற நடிகை மாயா கிருஷ்ணனின் சகோதரி. இவர் பிரபல இசையமைப்பாளர் ஒருவரிடம் நீண்ட நாட்களாக பணிசெய்திருக்கிறார். சமீபத்தில் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.
அப்போது அவர் வேலை செய்த இசையமைப்பாளர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தததாகவும் அதை கேமராவில் பதிவு செய்து மிரட்டியதாகவும் கூறியிருந்தார். மேலும் தனக்கு சம்பளமே தராமல் ஏமாற்றியதாகவும் தன்னிடமே நிறைய பணத்தை கடனாக பெற்றதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த இசையமைப்பாளர் மீது அடுக்கிய பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், அந்த இசையமைப்பாளர் யார், அவரது பெயர் என்ன என்பதை மட்டும் வெளிப்படுத்த மறுத்து விட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் சில இசையமைப்பாளர்களை தவறாக கணித்து அவர்தான் இது என இணையத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த சம்பவம் குறித்து ஒரு பதிவை செய்திருக்கிறார். பாடகி ஸ்வாகதாவின் நேர்காணலை பதிவிட்டு அதில் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாவது, இதை பெரிய அளவில் பரப்புங்கள். இன்னொரு இசையமைப்பாளர் பெயரை கெடுக்கவோ அல்லது தொழில் பொறாமையாலோ அல்ல.
இதில் ஸ்வாகதாவின் ஒரு கூற்றை கவனியுங்கள். அந்த இசையமைப்பாளரின் காம வேட்டை இன்றும் தொடர்கிறது. பல இளம் பெண்களுக்கு இந்த அவலம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த பலிகள் தொடர்வதை உடனே நிறுத்தவும் பெண்கள் காப்பாற்றப்படவும் அவர் யார் என்பது உலகுக்கு சொல்லப்பட வேண்டும். ஸ்வாகதாவை பெயரைச் சொல்ல நாம் வற்புறுத்த முடியாது.
ஆனால் தேவையான எல்லா குறிப்புகளையும் தெளிவாக அவர் சொல்லிவிட்டார். அந்த நேர்காணலுக்கு கீழே உள்ள கருத்துக்களில் பலரும் அவரது பெயரை யூகித்து விட்டனர். காவல்துறை ஒரு சில நிமிடங்களில் இவரை கண்டுபிடித்து கைது செய்ய முடியும் என்று ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பதிவில் கூறி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





