தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வென்றது. ஆனால் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்பதால் காங்கிரஸ் 5 கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 என 9 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இன்னும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே விஜய் ஆட்சியமைத்து முதல்வராக முடியும்.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் தவெக தலைவர் விஜய் 118 ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியல் தந்தால் மட்டுமே அவரை ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று தமிழக கவர்னர் அர்லேகர் திட்டவட்டமாக கூறிவிட்டார். இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் 2 எம்எல்ஏக்கள் ஆதரவுக்காக விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, 108 தொகுதிகளில் தனியாக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற தவெக அவர்களின் பரம எதிரியாக தேர்தல் களத்தில் சொல்லப்பட்ட திமுகவின் கூட்டணியை சேர்ந்த கட்சிகளுடன் இணைத்துக் கொள்வது சரியா?
காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற திமுகவின் ஓட்டுக்கள்தானே முக்கிய காரணம் என்ற கேள்வி வருகிறதே? அப்படியானால் திமுக எம்எல்ஏக்கள் கட்சித் தாவலில் வந்தால் கூட தவெக கட்சியில் இணைத்துக் கொள்ள முடியுமா? மக்களின் ஓட்டு அந்த திமுக எதிர்ப்பை வைத்ததால் தானே விஜய்க்கு கிடைத்தது என்பதை ஏன் யாரும் யோசிக்கவில்லை?
அது எங்கோ சருக்கலாக தெரிகிறதே? ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 108 எம்எல்ஏக்களுடன் ஆட்சி அமைக்க அனுமதி கொடுப்பது. இல்லையேல் மறு தேர்தல் நடத்த முடிவெடுத்தால் அதை எதிர்கொள்வது, இதுதானே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்?
கூட்டணிக்கு வர மறுத்த கட்சிகளை இப்போது இணைத்துக் கொள்வது மக்களின் அங்கீகாரத்தை, முடிவை அவமதிப்பது போல் ஆகும் அல்லவா? என்று இயக்குனர் சேரன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் இதுபோல் மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவது மற்ற மாநிலங்களில் சகஜமான ஒன்றாக நடந்திருக்கிறது என்று பலரும் சேரனுக்கு பதில் தந்துள்ளனர்.





