லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். விறுவிறுப்பாக நடந்துவந்த ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. படத்தின் பேட்ச் ஒர்க்கும் முடிந்துவிட்டதால் விரைவில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கவிருக்கின்றனர். தற்போது வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியா திரும்பி லியோ படத்துக்கான டப்பிங் பணியை முடித்துக் கொடுக்கவிருக்கிறார்.
அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் காக்கா, பருந்து கதையை கூறினார். அதில் காக்கா என்று விஜய்யைத்தான் ரஜினி கூறுகிறார் என்று புதிய சர்ச்சை எழுந்தது. தான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என அதே மேடையில் ரஜினி சொன்னாலும் காக்கா என்றால் விஜய்தான் என்ற பேச்சு இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
எனவே லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிக்கு விஜய் தக்க பதிலடி கொடுப்பார் என அவரது ரசிகர்கள் கூறினர். ஆனால் விஜய்யே ரஜினியின் தீவிர ரசிகர்தான். ரஜினியின் சீனை நடித்துக்காண்பித்துதான் எஸ்.ஏ.சியிடம் நடிப்பதற்கு சம்மதமே வாங்கினார். சூழல் இப்படி இருக்க விஜய் எப்படி ரஜினிக்கு எதிராக குட்டி கதை சொல்வார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
நிலைமை இவ்வாறு இருக்க லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர். அதன்படி திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென ஒரு தகவல் வெளியானது. அதாவது ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்தலாம் என படக்குழு திட்டமிட்டதாகவும்; அதற்கான இட தேர்வும் தீவிரமாக நடக்கிறது என்றும் கூறப்பட்டது.
இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தச் சூழலில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி வாரிசு, ஜெயிலர் ஆகிய படங்களின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடந்த நேரு உள்விளையாட்டு அரங்கத்திலேயே லியோ ஆடியோ ரிலீஸையும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். விழாவானது செப்டம்பர் இறுதியில் நடக்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில் நடந்தால் ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள். வெளிநாடு வியாபாரத்தைவிடவும் உள்ளூர் வியாபாரம் ரொம்பவே முக்கியம் என்று நினைத்ததால் தான் விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





