நடிகர் அர்ஜூன் நடித்த தமிழ் படங்களில் மிகவும் வரவேற்பை பெற்ற படம் முதல்வன். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. முதல்வராக இருக்கும் ரகுவரை பேட்டி எடுக்கும் அர்ஜூன், ஒரு நாள் முதல்வராகி பிறகு நிரந்தர முதல்வராவதே இந்த படத்தின் கதை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அர்ஜூன் முதல்வன் படம் குறித்து கூறியதாவது, ஜெண்டில்மேன் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படத்தில் நடித்தேன். ஆனால் இந்த படத்தில் சிஎம் கேரக்டரில் நடிக்க எனக்கு தயக்கமாக இருந்தது.
ஏனென்றால் மக்கள் என்னை சிஎம் ஆக ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் ஷங்கர்தான் என்னை ஊக்கப்படுத்தி தைரியமூட்டி நடிக்க வைத்தார். அதுவரை நடித்த படங்களில் மிஸ்டர் கிளீன் ஆக உங்கள் கேரக்டர் இருப்பதால் நிச்சயம் முதல்வராக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கை தந்தார்.
முதல்வன் படத்தில் முதல்வர் ரகுவரனை ஒரு ஜர்னலிஸ்ட் ஆக நான் பேட்டி எடுப்பது கதையில் மிக முக்கியமான காட்சி. 3 நாட்கள் அந்த காட்சி எடுக்கப்பட்டது. இந்த காட்சி சிறப்பாக வரவேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் மிகவும் மெனக்கெட்டார். அந்த காட்சியும் நன்றாக வந்திருந்தது.
அன்று இரவு ரகுவரன் என்னை போனில் அழைத்து பேசினார். வழக்கமான படப்பிடிப்பில் நிறைய பேசிக்கொள்வோம். போன் செய்து பழக்கம் அப்போது அதிகமாக இல்லை. நிறைய படங்களில் ரகுவரனுடன் நான் நடித்திருக்கிறேன். அவரது நடிப்பு அபாரமாக இருக்கும். ஆனால் யாரையும் அவர் அவ்வளவு சீக்கிரமாக பாராட்டி விட மாட்டார்.
அன்று இரவு என்னிடம் போனில் பேசிய ரகுவரன், மச்சா இன்னிக்கு அந்த பேட்டி எடுக்கிற சீன்ல உன் நடிப்பு ரொம்பவும் பிரமாதம். உன்னோட கண் அசைவுகள் முகபாவனைகள் வேற லெவலா இருந்துச்சு. அருமையா பண்ணியிருக்கேடா என்று பாராட்டினார். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. நன்றி மச்சா என்று சொன்னேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் அர்ஜூன் கூறியிருக்கிறார்.





