தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கி 2 ஆண்டுகள் 4 மாதங்களில் தமிழகத்தின் முதல்வர் ஆகிவிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்ட சபை தேர்தலில் தவெக கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதல்வராகவும் விஜய் பதவி ஏற்றுவிட்டார்.
அவரது வெற்றியை தமிழ் சினிமா சார்ந்தவர்கள் மற்றும் அரசியல் சார்பற்றவர்கள் மனதார பாராட்டுகின்றனர். அதே சமயத்தில் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் விஜய் பொறுப்பேற்ற இந்த 20 நாட்களிலேயே தமிழகத்தில் நடந்த பல விஷயங்கள் குறித்து கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்து பாஜக கட்சியில் இணைந்து தற்போது மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. அவர் தமிழில் தீனா தோஸ்த் ஐ தமிழரசன் போன்ற சில படங்களில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடித்தும் இருக்கிறார்.
சமீபத்தில் கேரளாவில் நடந்த பிரஸ்மீட்டில் செய்தியாளர்கள் சந்தித்தபோது மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ்கோபிடம், தவெக தலைவர் முதல்வர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுரேஷ்கோபி, முதல்வர் விஜயை இப்போது விமர்சிப்பது சரியில்ல. மக்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
அவர் வேலை செய்து தன்னை நிரூபிக்கட்டும். அவரை வேலை செய்ய விடுங்கள். தன்னை நிரூபிக்க அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கேரளாவில் தவெக கட்சிக்கான அமைப்பு துவங்கப் போவதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்தும் அப்போது சுரேஷ்கோபியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுரேஷ்கோபி, தமிழகத்தில் வெற்றி பெற்ற கட்சி கேரளாவில் வருவதில் என்ன பிரச்சனை? அவர் வரட்டும்.
எங்கு வேண்டுமானாலும் கட்சியை விரிவுபடுத்தட்டும். எல்லோரும் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். பாஜகவை கொள்கை எதிரி என்று எதிர்ப்பு மனநிலை கொண்ட விஜய்க்கு பாஜக கட்சியில் இருந்து ஒரு இணை அமைச்சரே ஆதரவு குரல் தந்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





